அருட்தந்தை போல் சற்குணநாயகம் அவர்களின் 88வது பிறந்தநாள் விழா

வண்ணத்துப்பூச்சி சமாதானப் பூங்காவின் செயல் நிறைவேற்றுப் பணிப்பாளரும், ஜேசு சபைத் துறவியுமான போல் சற்குணநாயகம் அடிகளார் தனது 88வது பிறந்தநாளை முன்னிட்டு, “மனிதன் தன் உள்ளத்தின் உள்ளே இருக்கும் மனித மாண்மையை உயர்த்தி உண்மை மனிதனாக வாழ வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

அவரது 88வது பிறந்தநாள் விழா கடந்த வாரம் வண்ணத்துப்பூச்சி சமாதானப் பூங்கா தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.

விழாவில் இந்து சமய ஆசியினை இளம் சைவப் புலவர் அலங்கார வினோதரர் சிவ விபீஷணன் ஐயா வழங்கியதுடன், இஸ்லாமிய சமய ஆசியினை ஜனாப் முஹமட் நழீம் நிகழ்த்தினார். தொடர்ந்து, பூங்கா பணியாளர்களால் பிறந்தநாள் பாடல் பாடப்பட்டு, கேக் வெட்டப்பட்டு, பலரது வாழ்த்துகளுடன் விழா நடைபெற்றது.

நிகழ்வின் ஒரு பகுதியாக, வண்ணத்துப்பூச்சி சமாதானப் பூங்கா தயாரித்த அருட்தந்தை போல் சற்குணநாயகம் அடிகளாரின் பன்முக ஆளுமையை விளக்கும் விவரண ஒளிப்படம் வெளியிடப்பட்டது. மேலும், செல்வி முஹமட் நழீம் அமானா ஹிஷ்மத் கவிதைபாட, பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் மோகனதாஸ் மற்றும் அன்பழகன் குரூஸ் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.

தனது ஏற்புரையில் அருட்தந்தை கூறியதாவது: “மனிதன் மீண்டும் பிறக்காவிட்டால் உயர்ந்த பணிகளைச் செய்ய முடியாது. மீண்டும் பிறப்பதால் தன் வாழ்வை மாண்புமிக்கதொரு வாழ்க்கையாக மாற்ற முடியும். மீண்டும் பிறத்தல் என்பது உள்ளத் தூய்மையுடன் பிறத்தலாகும்” என்றார்.

அனைவருடனும் இணைந்து தனது 88வது பிறந்தநாளை மகிழ்வுடன் கொண்டாடிய அவர், முப்பது ஆண்டுகளாக சமாதானப் பணியில் பயணிக்கும் வண்ணத்துப்பூச்சி சமாதானப் பூங்கா குடும்பத்தினருடன் இனிய தருணங்களைப் பகிர்ந்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *