முல்லைத்தீவு மாவட்டத்தில் இல்மா அஹதிய்யா பாடசாலை அங்குரார்ப்பண நிகழ்வு

முல்லைத்தீவு மாவட்டம் கரைத்துறைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட நீராவிப்பிட்டி கிழக்கு கிராம அலுவலர் பிரிவின் மு/தண்ணீரூற்று முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இல்மா அஹதிய்யா பாடசாலையின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று(27) காலை 8.00 மணிக்கு

மாவட்ட முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு ஜே. ஆதில் தலைமையில் நடைபெற்றது.

 

இந்த நிகழ்வில் அஹதிய்யா(அறநெறி) பாடசாலை அமைய வழிகாட்டியாக இருந்தவரும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபருமான திரு.அ. உமாமகேஸ்வரன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்து அஹதிய்யா பாடசாலையினை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.

 

அரசாங்க அதிபர் தனது பிரதம விருந்தினர் உரையில் இஸ்லாமியர்கள் அஹதிய்யா பாடசாலைகள் மூலமாகவும் இந்துக்கள் அறநெறி பாடசாலைகள் ஊடாகவும் அதேபோன்று பெளத்தர்கள் தகம் பாடசாலையூடாகவும் கிறிஸ்தவர்கள் ஞாயிறுப் பாடசாலையூடாகவும் தங்களுடைய மார்க்க நெறிமுறைகளுக்கூடாக மாணவர்களை ஆன்மீக ரீதியில் பக்குவப்படுத்துகின்ற, நல்வழிப்படுத்துகின்ற இத்தகைய செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் இத்தகைய அஹதிய்யா பாடசாலை முல்லைத்தீவு மாவட்டத்தில் இயங்க ஆரம்பித்துள்ளது.

 

மேலும் இன்றைய சூழலில் பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் இளையோர் சமுதாயம் உள்வாங்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களை முன்னேற வேண்டிய தேவைப்பாடுகள் உள்ளதெனவும், அச்சுறுத்துகின்ற பல விடயங்கள் உங்கள் பிள்ளைகளை சூழ்ந்திருக்கின்ற போதிலும் பிள்ளைகளை நல்லொழுக்கம் சார்ந்து வளர்த்தெடுப்பதற்கும் ஆரோக்கியமான சமுதாயத்தினை உருவாக்கிக் கொள்வதற்கும் இத்தகைய அஹதிய்யா பாடசாலையின் செயற்பாடுகள் உறுதுணையாக இருப்பதாகவும் இத்தகைய செயற்பாடுகளினை மேற்கொள்பவர்களுக்கு தனது நன்றியினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார்.

 

அதனைத் தொடர்ந்து அஹதிய்யா பாடசாலையின் தோற்றமும் வளர்ச்சியும் எனும் தலைப்பில் யாழ்ப்பாணம் மாவட்ட முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு எஸ்.எம். நிஸ்தக்கால் கருத்துரை வழங்கப்பட்டது.

 

அத்தோடு அஹதிய்யா மத்திய சம்மேளத்தின் பிரதித் தலைவரில் ஒருவரான பாறூக் பதீன் ஆசிரியரால் அஹதிய்யா பாடசாலையின் நிர்வாக கட்டமைப்பு தொடர்பாக தெளிவுபடுத்தப்பட்டது.

 

இந்த நிகழ்வில் மு/தண்ணீரூற்று மு.ம.வித்தியாலயத்தின் அதிபர், ஆசிரியர்கள் , பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், இல்மா அஹதிய்யா பாடசாலையின் நிர்வாகிகள், பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் மாணவர்கள், பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *