அம்பாறை மாவட்டம், திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் மற்றும் காயத்ரி கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் இன்று (24) செவ்வாய்கிழமை முன்னெடுக்கப்பட்டன.
கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் துறையின் உயர்மட்ட அதிகாரிகள் இன்று திருக்கோவில் பிரதேசத்திற்கு விஜயம் செய்து, இப்பிரதேசத்தில் அதிகரித்து வரும் டெங்கு அபாயத்தைக் கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடல்களையும் மேற்கொண்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, தம்பிலுவில் மற்றும் காயத்ரி கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் மற்றும் அவற்றின் சுற்றுப்புறங்கள் நேரடியாகப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதன்போது சுமார் 20 வீடுகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், அனைத்திலும் டெங்கு நுளம்புக் குடம்பிகள் காணப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது. இது பிரதேசத்தில் நிலவும் டெங்கு அபாயத்தின் தீவிரத்தை வெளிப்படுத்தியுள்ளது.
இந்நடவடிக்கையில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய நிபுணர் டாக்டர் சரவணபவன், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ஸஹீலா இஸ்ஸதீன், பிராந்திய தொற்றுநோய்ப் பிரிவுக்கான வைத்தியர் டாக்டர் எம்.ஐ. றிஸ்னிமுத், திருக்கோவில் பிரதேச பதில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் உவைஸ் பாறூக், திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளர் எஸ். சசிகுமார் உள்ளிட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் நுளம்புக் கட்டுப்பாட்டு உதவியாளர்கள் கலந்துகொண்டனர்.
இதற்கமைய, நாளை (25) புதன்கிழமை முதல் திருக்கோவில் பிரதேசம் முழுவதும் புகை விசிறும் (Fogging) நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்நடவடிக்கைகளுக்கு திருக்கோவில் பிரதேச சபை முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருகின்றது.
எனவே, பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் நீர் தேங்கக்கூடிய இடங்களை அகற்றி, நீர் சேமிக்கும் பாத்திரங்களை முறையாக மூடி வைத்து நுளம்புகள் பெருகுவதைத் தடுத்து சுகாதாரதுறையினருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சுகாதாரத் தரப்பினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும், சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டெங்கு ஒழிப்பில் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது என்பதால், அனைவரும் பொறுப்புணர்வுடன் செயற்பட்டு தமது வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களைத் தூய்மையாகப் பேணுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

