இலங்கையில் 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து, பல்வேறு அரச ஊழியர் தொழிற்சங்கங்கள் நாடளாவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.
அனைத்து அரச ஊழியர்களுக்கும் மாதாந்தம் 25,000 ரூபாய் இடைக்காலக் கொடுப்பனவை வழங்க வேண்டும் என்பதே தொழிற்சங்கங்களின் பிரதான கோரிக்கையாக முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், சுகாதாரப் பணியாளர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர்.
அத்துடன், அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் சில தொழிற்சங்கங்கள் கறுப்பு ஆடை அணிந்து பணிக்குச் செல்லும் எதிர்ப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளன.
தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் உரிய தீர்வுகளை வழங்கத் தவறினால், எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி முதல் பல்வேறு துறைகளில் வேலைநிறுத்தப் போராட்டங்களை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் அன்றைய தினம் சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாகவும், சுகாதாரத் துறையிலும் வேலைநிறுத்த நடவடிக்கைகள் தொடர்பான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

