விவசாயிகள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்வதாகவும், விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உரிய தீர்வுகளை வழங்கவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.
இன்று (22) அம்பாறை மாவட்டத்தில் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடலில் பங்கேற்று உரையாற்றிய அவர், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு, பணவீக்கம் மற்றும் வட்டி விகித உயர்வுகள் மக்களின் வாழ்க்கைச் சுமையை மேலும் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார்.
விவசாயிகள் கடன் பெற்று விவசாயம் செய்தாலும், தரமான விதை நெல், உரம், எரிபொருள் மற்றும் உரிய நேரத்தில் உர மானியம் கிடைப்பதில் சிக்கல்கள் காணப்படுவதாகவும், அறுவடைக்கு உரிய விலை கிடைக்காமையால் விவசாயிகள் கடன் சுமைக்குள் தள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஒரு கிலோ நெல்லுக்கான உத்தரவாத விலை 150 ரூபாவாக வழங்கப்படும் என முன்னர் கூறப்பட்ட நிலையில், தற்போது 120 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளமை விவசாயிகளுக்கு நட்டத்தை ஏற்படுத்துவதாகவும், உற்பத்திச் செலவுகளுடன் ஒப்பிடுகையில் விவசாயிகள் நியாயமான வருமானத்தைப் பெற முடியாத நிலை காணப்படுவதாகவும் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.
மேலும், நாட்டில் அரிசி உற்பத்தி அதிகமாக இருந்தும் அரிசி இறக்குமதி மேற்கொள்ளப்படுவது, விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காமை, அதிக வரி விதிப்பு மற்றும் பாராளுமன்றத்தில் மக்கள் பிரச்சினைகளை முன்வைப்பதற்கு தடைகள் ஏற்படுத்தப்படுவதாகவும் அவர் அரசாங்கத்தை விமர்சித்தார்.
விவசாயிகளைப் பாதுகாக்கும் தேசிய விவசாயத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைப்பதை உறுதிப்படுத்தும் அரசாங்கமே நாட்டுக்குத் தேவையெனவும் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தினார்.

