கம்பஹா வைத்தியசாலையில் போராட்டம்!

கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் நிலவும் சுமார் 120 தாதியர் உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்களை உடனடியாக நிரப்பாவிட்டால், எதிர்வரும் நாட்களில் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் எச்சரித்துள்ளது.

தாதியர் பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்தி செய்யக் கோரி, இன்று (13) வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணி முதல் நண்பகல் 12 மணி வரை வைத்தியசாலை வளாகத்தில் தாதியர் உத்தியோகத்தர்கள் ஒரு மணிநேர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வைத்தியசாலையில் தற்போது சுமார் 370 தாதியர் உத்தியோகத்தர்கள் மாத்திரமே கடமையாற்றுவதாகவும், தடையின்றி சேவைகளை முன்னெடுப்பதற்கு மேலும் 120 தாதியர்கள் அவசியம் எனவும் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.

இந்தப் பற்றாக்குறையினால் ஒரு தாதியர் மூன்று தாதியர்களின் பணிகளைச் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அவர்கள் கடுமையான உடல் மற்றும் மன அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் மாகாண சுகாதார அதிகாரிகளுக்கு பலமுறை அறிவித்தும் உரிய தீர்வு கிடைக்காத நிலையில், புதிய நியமனங்கள் அல்லது இடமாற்றங்கள் மூலம் வெற்றிடங்களை நிரப்புமாறு கோரி மேல் மாகாண சுகாதாரச் செயலாளருக்கு சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது.

இன்றைய ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து அதிகாரிகள் உடனடியாகத் தீர்வு வழங்கத் தவறினால், பாரிய தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என சங்கம் எச்சரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *