ஈரானியர்கள் முன்வைத்துள்ள ஏழு கோரிக்கைகளை அமெரிக்கா முதலில் ஏற்றுக்கொண்டால் மட்டுமே, அடுத்தகட்ட இராஜதந்திர நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் என்று ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றிற்கு அளித்த நேர்காணலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் கூறுகையில்,முன்னேற்றத்திற்குத் தடையாக இரண்டு முக்கிய சிக்கல்கள் இருப்பதாகக் குறிப்பிட்டார். முதலாவதாக, தாங்கள் முன்வைத்த கோரிக்கைகள் குறித்து வாஷிங்டனிடமிருந்து இதுவரை எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.
இரண்டாவதாக, களத்தில் அமெரிக்கா தொடர்ந்து மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் சூழலை மேலும் சிக்கலாக்குகின்றன.
இந்தச் சூழலில், கட்டார் உள்ளிட்ட மத்தியஸ்தர்கள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் காலத்தோடு போட்டியிட்டு முயற்சி செய்து வரும் நிலையில், சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக ஈரானிய அதிகாரிகளே உறுதிப்படுத்தியுள்ளனர்.
இருப்பினும், ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கோ அல்லது பேச்சுவார்த்தைகளைத் தொடர்வதற்கான ஒரு கட்டமைப்பை உருவாக்குவதற்கோ இரு தரப்பினரும் இன்னும் வெகுதொலைவிலேயே உள்ளனர்.
மிக முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால், ‘போரும் அல்லாத, அமைதியும் அல்லாத’ இந்த நிலை நீடித்திருக்க முடியாது என்பதை ஈரானியர்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகின்றனர்.

