மீண்டும் திரைக்கு வரும் விஜய்!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், அரசியலுக்கு வந்தபின்னர் தனது திரைப்பயணத்துக்கு முழுவதுமாக முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

கடைசியாக அவர் நடிப்பில் ஜனநாயகன் திரைப்படம் வெளியானது. இந்நிலையில் அவரது சினிமா ரசிகர்களுக்கு இந்த வருடம் புத்தாண்டு விருந்தாக, அவர் நடிப்பில் 2017 ஆம் ஆண்டு வெளியான ‘பைரவா’ திரைப்படம் மீண்டும் வெளியாக உள்ளது.

பி நாகிரெட்டியாரின் விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. வெங்கட்ராம ரெட்டி மற்றும் பி. பாரதி ரெட்டி தயாரிப்பில், இயக்குநர் பரதன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம்தான் ‘பைரவா’.

தற்போது 2027 ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஜனவரி 1 ஆம் திகதி இப்படத்தை மிகப்பெரிய அளவில் மீண்டும் திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளது விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம்.

இயக்குநர் பரதன், விக்ரம் நடிப்பில் வெளியான ‘தில்’, ‘தூள்’, விஜய் நடிப்பில் வெளியான ‘கில்லி’, ‘மதுர’ மற்றும் ‘வீரம்’ உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதியவர் என்பவர் குறிப்பிடத்தக்கது. மேலும், விஜய்யை வைத்து ‘அழகிய தமிழ் மகன்’ படத்தை இயக்கியிருந்தார். இந்த நிலையில், மீண்டும் விஜய்யுடன் இணைந்து அவர் இயக்கிய திரைப்படம் ‘பைரவா’.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு, மறைந்த நடிகர் டேனியல் பாலாஜி ஆகியோர் வில்லனாகவும், சதீஷ், தம்பி ராமையா, மைம் கோபி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இப்படத்தின் ‘பட்டைய கெளப்பு’, ‘நில்லாயோ’, ‘பா பா’, ‘வர்லாம் வர்லாம் வா பைரவா’ உள்ளிட்ட பாடல்கள் இன்றளவும் ரசிகர்களின் விருப்பமான பாடல்களாக உள்ளன.

2017 ஆம் ஆண்டு பொங்கல் வெளியீடாக ஜனவரி 12 ஆம் திகதி திரைக்கு வந்த ‘பைரவா’, வெளியான ஐந்து முதல் ஆறு நாட்களிலேயே ரூபா 100 கோடி வசூலைக் கடந்தது. இதன் மூலம் விஜய்யின் திரைப்பயணத்தில் ரூபா 100 கோடி வசூலைக் கடந்த முக்கியமான திரைப்படங்களில் ஒன்றாக ‘பைரவா’ இடம்பெற்றது.

இந்நிலையில் இப்படத்தினை SIM Cine International நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியிடுகிறது. 2027 புத்தாண்டின் முதல் நாளை, விஜய்யின் ‘பைரவா’ திரைப்படத்துடன் கொண்டாட விஜய் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *