புதிய கல்வி மறுசீரமைப்புச் செயன்முறை மற்றும் திருத்தப்பட்ட தேசிய கலைத்திட்டச் சட்டகம் தொடர்பாகப் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், நாட்டிலுள்ள அனைத்து கல்வி வலயங்களையும் உள்ளடக்கும் வகையில் கல்வி அதிகாரிகள் மற்றும் அதிபர்களைத் தெளிவுபடுத்தி பயிற்சியளிக்கும் தேசிய வேலைத்திட்டம் நேற்றும் (12) மற்றும் இன்றும் (13) நாடளாவிய ரீதியில் 100 மத்திய நிலையங்களில் முன்னெடுக்கப்படுகிறது.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ், புதிய கல்வி மறுசீரமைப்புகளின் நோக்கங்கள் மற்றும் எதிர்பார்க்கப்படும் பெறுபேறுகள், திருத்தப்பட்ட தேசிய கலைத்திட்டச் சட்டகம், கல்வி நிர்வாகம் மற்றும் பௌதிக வளங்களின் அபிவிருத்தி, பாடசாலை மட்ட மதிப்பீடுகள் மற்றும் சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட மறுசீரமைப்புச் செயன்முறையுடன் தொடர்புடைய முக்கிய துறைகள் குறித்து பங்கேற்பாளர்களுக்கு விரிவான தெளிவூட்டலை வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய கல்வி மறுசீரமைப்புகள் தொடர்பான சரியான புரிதலை கல்வி முறைமையின் அனைத்துத் தரப்பினருக்கும் எடுத்துரைப்பதுடன், மறுசீரமைப்புச் செயன்முறையை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான அறிவு மற்றும் திறன்களை கல்வி அதிகாரிகள் மற்றும் அதிபர்களுக்கு வழங்குவதும் இந்த தேசிய வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
அதேவேளை, நவம்பர் 19ஆம் திகதி நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளையும் உள்ளடக்கும் வகையில் பாடசாலை மட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள ஆசிரியர்களைத் தெளிவுபடுத்தும் நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிகரமாக நடத்துவதற்குத் தேவையான பயிற்சிகளை கல்வி வலயங்களின் கல்வி அதிகாரிகள் மற்றும் அதிபர்களுக்கு வழங்குவதும் இந்த இருநாள் தேசிய வேலைத்திட்டத்தின் மற்றுமொரு நோக்கமாகும்.
இந்த நிகழ்ச்சித்திட்டத் தொடரின் இறுதிக் கட்டமாக, 2026 நவம்பர் 30ஆம் திகதி முதல் டிசம்பர் 04ஆம் திகதி வரையான ஒரு வார காலப்பகுதி பெற்றோர்களைத் தெளிவுபடுத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஒவ்வொரு பாடசாலையிலும் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையைக் கருத்திற்கொண்டு பொருத்தமான நாட்கள் ஒதுக்கப்பட்டு, அந்தந்தப் பாடசாலைகளின் அனைத்து மாணவர்களினதும் பெற்றோர்களுக்கும் புதிய கல்வி மறுசீரமைப்புகள் மற்றும் திருத்தப்பட்ட தேசிய கலைத்திட்டச் சட்டகம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது.

