TIN சான்றிதழ் தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்!

வரி செலுத்துவோர் அடையாள இலக்க (TIN) சான்றிதழைப் பெற்றுக்கொள்வதற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்களுக்கு அவசியமின்றி வருவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

TIN சான்றிதழுக்கான விண்ணப்பங்களை இணையவழியிலும் சமர்ப்பிக்க முடியும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பேச்சாளர் நந்தன குமார தெரிவித்துள்ளார்.

2026 நவம்பர் 1ஆம் திகதி முதல் எட்டு குறிப்பிட்ட பொருளாதார நடவடிக்கைகளுக்கு TIN இலக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அந்த எட்டு நடவடிக்கைகள் வருமாறு:

* வங்கிக் கணக்குகளைத் திறத்தல்.
* கட்டிடத் திட்டங்களுக்கு அனுமதி பெறுதல்.
* மோட்டார் வாகனங்களைப் பதிவு செய்தல்.
* மோட்டார் வாகன அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பித்தல்.
* காணி மற்றும் சொத்துக்களைப் பதிவு செய்தல்.
* வணிக நிறுவனங்களைப் பதிவு செய்தல்.
* இலங்கையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் பங்குகளைப் பரிமாற்றம் செய்தல்.
* கடன் அட்டைகளைப் பெற்றுக்கொள்ளுதல்.

மேலும், 2024 ஜனவரி 1ஆம் திகதி முதல் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைவரும் சட்டரீதியாக TIN இலக்கத்தைப் பெற்றிருக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், பொதுமக்கள் பதற்றமடையவோ அவசரமாக அலுவலகங்களுக்கு வரிசையில் நிற்கவோ தேவையில்லை எனத் தெரிவித்த அவர், எட்டு குறிப்பிட்ட நடவடிக்கைகளுக்காக TIN சான்றிதழ் தேவைப்படுபவர்கள் மாத்திரம் சம்பந்தப்பட்ட பிரிவுகளை அணுகுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இணையவழியில் விண்ணப்பிக்க முடியும் என்றாலும், சமர்ப்பிக்கப்படும் தகவல்கள் சரிபார்க்கப்பட வேண்டியுள்ளதால் அதற்குச் சிறிது காலம் எடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு TIN இலக்கம் வழங்கப்பட்ட பின்னர், சான்றிதழ் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். இதற்காக பிராந்திய அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை.

மேலும், TIN சான்றிதழைப் பெற்றுக்கொண்ட பின்னர், TIN இலக்கம் தேவைப்படும் எந்தவொரு பரிவர்த்தனைக்கும் அதனைப் பயன்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *