இலங்கையின் வாகன இறக்குமதிச் செலவில் 34.4% வீழ்ச்சி !

இலங்கையின் வாகன இறக்குமதிக்கான செலவினம், கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் 34.4 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மத்திய வங்கியின் அண்மைய வெளிநாட்டுத் துறை செயல்திறன் அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, தனிப்பட்ட மற்றும் வர்த்தக வாகனங்கள் உள்ளிட்ட வாகன இறக்குமதிக்காக இந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் 188 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன.

எனினும், இந்த வீழ்ச்சிக்கு மத்தியிலும், 2026ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் வாகன இறக்குமதிக்காக மொத்தமாக 1.87 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன.

இதேவேளை, கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் பொருட்களின் மொத்த இறக்குமதிச் செலவு 2.9 சதவீதத்தால் அதிகரித்து 2.11 பில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

அத்துடன், 2026ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டெம்பர் வரையான ஒன்பது மாத காலப்பகுதியில் மொத்த இறக்குமதிச் செலவு 18.67 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 21.3 சதவீத அதிகரிப்பாகும்.

இதற்கிடையில், இலங்கையின் பொருட்கள் வர்த்தகப் பற்றாக்குறையும் செப்டெம்பர் மாதத்தில் குறைவடைந்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் 910 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்ட வர்த்தகப் பற்றாக்குறை, இந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் 731 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறைந்துள்ளது.

எனினும், 2026ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களுக்கான ஒட்டுமொத்த வர்த்தகப் பற்றாக்குறை 7.9 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *