கட்டான, கிரிஉல்ல பகுதியில் 21 கிலோ 750 கிராமிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் தொடர்பில் முன்னர் கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் வெளிவந்த தகவல்களின் அடிப்படையில் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடிதுவக்குவின் அறிவுறுத்தலின் பேரில், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அசோக தர்மசேனவின் தலைமையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனிடையே, மோட்டார் வாகனமொன்றில் ஐஸ் (ICE) போதைப்பொருளைக் கடத்திச் சென்று கொண்டிருந்த நபர் ஒருவரை தலங்கம, கலல்கொட சந்தி பகுதியில் வைத்து கைது செய்ய நுகேகொடை பிராந்திய நச்சு போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சந்தேகத்திற்குரிய மோட்டார் வாகனத்தைச் சோதனையிட்ட போது, அதிலிருந்து 1 கிலோ 10 கிராம் எடையுடைய ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
நுகேகொடை பிராந்திய நச்சு போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் இந்தச் சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய நபராவார்.
சம்பவம் தொடர்பில் தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

