இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கைத் தமிழ் மக்களை மீள இலங்கைக்குக் கொண்டுவருவதாகக் கூறி, கனடியன் பேரவை மற்றும் ஜ.எம்.எஸ். ஆகிய அமைப்புகள் பணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஈரோஸ் கட்சியின் தலைவர் இராஜநாதன் பிரபாகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று சனிக்கிழமை (24) நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்தியாவில் உள்ள அகதிகளை மீளக் குடியமர்த்தும் முயற்சி வரவேற்கத்தக்கது என்றாலும், அதற்கான முறையான திட்டம், இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்களுடனான கலந்துரையாடல், உரிய உத்தரவாதங்கள் ஆகியவை இல்லாமல் எவ்வாறு பணம் வசூலிக்க முடியும் என அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், இதுவரை வசூலிக்கப்பட்ட பணத்தின் மொத்தத் தொகையை சம்பந்தப்பட்ட அமைப்புகள் உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். கனடாவில் மட்டுமன்றி ஐரோப்பிய நாடுகளிலும் இவ்வாறு பணம் வசூலிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், புலம்பெயர் தமிழர்கள் இந்த விடயத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இந்தியாவின் திருச்சி உள்ளிட்ட அகதி முகாம்களில் வசிக்கும் மக்கள் தாயகம் திரும்புவதற்கான ஏற்பாடுகள் குறித்து தம்மைத் தொடர்புகொண்டுள்ளதாகவும், அவர்களின் விருப்பு வெறுப்புகளை அறிந்துகொள்வதற்காக அடுத்த மாதம் குழுவொன்றுடன் இந்தியாவுக்குச் சென்று அகதி முகாம்களைப் பார்வையிடவுள்ளதாகவும் அவர் கூறினார்.
அகதிகளை மீளக் குடியமர்த்துவதற்கு முன்னர் அவர்களுக்கான காணி, வீடு, வாழ்வாதாரம் மற்றும் சட்டரீதியான ஏற்பாடுகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இது தொடர்பில் கனடியன் பேரவை மற்றும் ஜ.எம்.எஸ். அமைப்புகள் தம்முடன் தொடர்புகொண்டு ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

