பேராதனைப் பல்கலைக்கழகத்தில் உள்ள சுமார் 800 பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களில் சுமார் 100 பேர் கடந்த இரண்டரை ஆண்டுகளில் சேவையை விட்டு விலகியுள்ளனர் என்று பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கங்கள் கூட்டமைப்பின் தலைவர் கலாநிதி ருசிக்க பெர்னாண்டோ தெரிவித்தார்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் திங்கட்கிழமை (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே கலாநிதி ருசிக்க பெர்னாண்டோ இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
“பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் எவ்வித கவனமும் செலுத்தாததால், தொழிற்சங்க நடவடிக்கைகளை தீவிரப்படுத்த ஆசிரியர் கூட்டமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் புதிய மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளும் செயல்முறை கடும் நெருக்கடிக்கு உள்ளாகலாம்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும் இளங்கலை பட்டப்படிப்புகளை பயிலும் சுமார் 25,000 மாணவர்கள் உள்ளனர். இந்த மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு 800-க்கும் குறைவான பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களே உள்ளனர். இந்த சிறு தொகையினரைக் கொண்டு பல்கலைக்கழகத்தின் அனைத்து மாணவர்களுக்கும் சரியான முறையில் கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் உள்ள சில பட்டப்படிப்புகளுக்கு அப்பாடப்பிரிவுக்குரிய சிறப்பு விரிவுரையாளர்கள் எவரும் இல்லை. வேறு பாடப்பிரிவுகளுக்கு கற்பிக்கும் பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களுமே அந்த பட்டப்படிப்பு வகுப்புகளையும் நடத்தி வருகின்றனர். இது குறித்து கடந்த இரண்டு மாதங்களாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பாக நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தினோம். இதுவரை எவ்வித சாதகமான முடிவும் கிடைக்கவில்லை. எனவே எங்களது நடவடிக்கைகளை தீவிரப்படுத்த தீர்மானித்துள்ளோம்.”
இவ்வாறே நிலைமை தொடர்ந்தால், நமது அரசுப் பல்கலைக்கழகக் கட்டமைப்பு இன்னும் 10 ஆண்டுகளுக்குள் முழுமையாகச் சீர்குலைந்துவிடும். தேர்தலுக்காக வெளியிடப்பட்ட கொள்கைப் பிரகடனத்தில் கல்விக்காக வரவு செலவுத் திட்டத்தில் 6% ஒதுக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், கடந்த ஆண்டில் அரசாங்கம் உண்மையாக ஒதுக்கியது சுமார் 2% மட்டுமே ஆகும்.”என்றார். இதில் கலாநிதி முவிசால் அபூபக்கர் உற்பட பலர் கருத்து வெளியிட்டனர்

