இளைஞர்களின் அரசியல் பங்கேற்பை வலுப்படுத்த வெஸ்மின்ஸ்டர் மன்ற ஆதரவு

இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் எதிர்கால செயற்பாடுகளுக்கு ஜனநாயகத்திற்கான வெஸ்மின்ஸ்டர் மன்றத்தின் ஆதரவைப் பெற்றுக்கொள்வது மற்றும் இளைஞர்களின் அரசியல் பங்கேற்பு மற்றும் தலைமைத்துவத்தை வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் அதன் தலைவர் பிரதியமைச்சர் எரங்க குணசேகர தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயம் பற்றிக் கவனம் செலுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் வெஸ்மின்ஸ்டர் மன்றத்தின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

இதில், குறித்த ஒன்றியத்தின் செயற்பாடுகளுக்காக WFD நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய ஆதரவு, பயிற்சி வாய்ப்புகள் மற்றும் இளைஞர் தலைமைத்துவ அபிவிருத்தி தொடர்பில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

மேலும், இளம் தலைமுறையினரை அரசியல் செயற்பாடுகள், கொள்கை வகுத்தல் மற்றும் அரசியல் செயற்பாடுகளில் தீவிரமாக ஈடுபடுத்துவதன் முக்கியத்துவம் தொடர்பிலும் வருகை தந்த பிரதிநிதிகளுடன் கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக, தேர்தல்களுக்குப் பின்னரும் இளைஞர்களை தொடர்ச்சியாக அரசியல் மற்றும் கொள்கை தொடர்பான கலந்துரையாடல்களுடன் இணைத்துக்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன், இளைஞர்கள் எதிர்கொள்ளும் தொழிலின்மை உள்ளிட்ட சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தி, இளைஞர் தலைமைத்துவத்தையும் அவர்களின் அரசியல் பங்கேற்பையும் மேம்படுத்துவதற்கான பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *