வடக்கில் அனுமதியற்ற விளம்பரப் பதாகைகளை அகற்ற உத்தரவு

பொதுமக்களின் போக்குவரத்து, பாதுகாப்பு, நகர அழகியல் மற்றும் பொது இடங்களின் பயன்பாட்டுக்கு இடையூறாக அமைந்துள்ள அனுமதியற்ற விளம்பரப் பதாகைகள், அறிவித்தல்கள் போன்ற கட்டமைப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் உடனடியாக முன்னெடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் பணிப்புக்கு அமைவாக வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார்.

இதற்கமைய, வலி.தெற்கு பிரதேச சபை மற்றும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களால் தமது அதிகார எல்லைக்குள் காணப்படும் அனுமதியற்ற விளம்பரப் பதாகைகள் உள்ளிட்டவற்றை அகற்றும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வடக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்களத்தால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலில், மாநகர சபைகள், நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகளின் அதிகார எல்லைக்குள் காட்சிப்படுத்தப்படும் விளம்பரப் பலகைகள், பதாகைகள் மற்றும் ஏனைய விளம்பர அறிவித்தல்கள் உரிய ஒழுங்குமுறைகளுக்கு அமைவாக மட்டுமே காட்சிப்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொது வீதிகள், வீதியோரங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தும் இடங்களில் உரிய அனுமதியின்றி விளம்பர அறிவித்தல்கள் அல்லது பதாகைகள் காட்சிப்படுத்தப்படுவது, பொதுமக்களுக்கும் வாகனப் போக்குவரத்துக்கும் இடையூறாக அமைவதுடன், சில சந்தர்ப்பங்களில் பாதுகாப்பு அச்சுறுத்தல்களையும் ஏற்படுத்தக்கூடும் என்பதால், அவற்றை ஒழுங்குபடுத்துவது அவசியம் என உள்ளூராட்சி ஆணையாளர் தனது அறிவுறுத்தலில் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக, சாரதிகளின் கவனத்தைத் திசைதிருப்பக்கூடிய வகையிலான விளம்பரங்கள், வாகன ஓட்டுநர்களின் பார்வைக்கு தடையாக அமையும் விளம்பரக் கட்டமைப்புகள், மின் வெளிச்சம் அல்லது பிற அம்சங்களால் வீதிப் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய விளம்பரங்கள் ஆகியவற்றை அனுமதிக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பொது இடங்களின் ஒழுங்கு, சுற்றுச்சூழல் மற்றும் சமூகப் பொறுப்புணர்வைக் கருத்தில் கொள்ளாமல் காட்சிப்படுத்தப்படும் விளம்பரங்களும், உரிய அனுமதி பெறப்படாத விளம்பர அறிவித்தல்களும் அகற்றப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று, அனுமதிக்கப்பட்ட காலம் நிறைவடைந்த பின்னரும் தொடர்ந்து காட்சிப்படுத்தப்படும் விளம்பர அறிவித்தல்களையும் அகற்றுவதற்கான நடவடிக்கைகளை உள்ளூராட்சி மன்றங்கள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஏற்கனவே அனுமதி பெற்று காட்சிப்படுத்தப்பட்டிருந்த விளம்பர அறிவித்தல்களும் மீளாய்வு செய்யப்பட வேண்டும் எனவும், அனுமதியின் காலம் நிறைவடைந்தவை அல்லது உரிய நிபந்தனைகளை மீறி காட்சிப்படுத்தப்பட்டுள்ளவை தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

‘பொது இடங்கள் அனைவருக்கும் உரியவை. அவற்றை தனிநபர் அல்லது வணிக நோக்கங்களுக்காக ஒழுங்கற்ற முறையில் பயன்படுத்த அனுமதிக்க முடியாது. மக்களின் பாதுகாப்பையும், நகரங்களின் ஒழுங்கையும், பொதுமக்களின் சுதந்திரமான போக்குவரத்தையும் கருத்திற்கொண்டு உள்ளூராட்சி மன்றங்கள் தமக்குள்ள சட்டரீதியான அதிகாரங்களைப் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும்’ என்ற அணுகுமுறையின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

வடக்கு மாகாணத்தின் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் தமது அதிகார எல்லைக்குள் காணப்படும் விளம்பரப் பதாகைகள், அறிவித்தல்கள் தொடர்பில் கள ஆய்வுகளை மேற்கொண்டு, உரிய அனுமதி இல்லாதவை மற்றும் விதிமுறைகளை மீறியவை தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உள்ளூராட்சி ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *