ஆப்கானிஸ்தானில் கனமழை 77 பேர் பலி!

ஆப்கானிஸ்தானில் கடந்த 10 நாட்களாகப் பெய்து வரும் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளில் சிக்கி இதுவரை 77 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் பல மாகாணங்களில் நிலவும் சீரற்ற வானிலையினால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. கடந்த 48 மணித்தியாலங்களில் மட்டும் அனர்த்தங்களினால் 26 பேர் பலியாகியுள்ளனர்.
கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவுகளே இந்த உயிரிழப்புகளுக்குப் பிரதான காரணமாகும்.
எதிர்வரும் நாட்களிலும் ஆப்கானிஸ்தான் முழுவதும் மேலதிக மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, ஆற்றங்கரையோரங்கள் மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு பேரிடர் மேலாண்மை ஆணையம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், தற்போதைய அனர்த்தம் காரணமாகப் பல வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ள நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *