நிந்தவூர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

நிந்தவூர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (11) நிந்தவூர் பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. நிந்தவூர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவா  தலைமையில், நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எல். அப்துல் லத்தீப்  ஒருங்கிணைப்பில் இக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நிந்தவூர் பிரதேசத்தின் அடிப்படை வசதிகள், கல்வி, சுகாதாரம், வீதி மற்றும் வடிகால் அபிவிருத்தி, மின்சாரம், கடலரிப்பு தடுப்பு, குடியிருப்பு வசதிகள் உள்ளிட்ட பல துறைகளை உள்ளடக்கிய விரிவான அபிவிருத்தி முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன.

பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் அவர்களினால் 32 முக்கிய முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டன. அவற்றில் கடலரிப்பு தடுப்பு வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுத்தல், இலங்கை மின்சார சபை நிந்தவூர் பாவனையாளர் சேவை நிலையத்திற்கான நிரந்தர கட்டிடம் அமைப்பதற்கு அரச காணி ஒதுக்கீடு, பல பாடசாலைகளில் புதிய கட்டிடங்கள், வகுப்பறைகள், விஞ்ஞான மற்றும் கணினி ஆய்வுகூடங்கள் அமைத்தல், சுற்றுமதில்கள், உள்ளக வீதிகள் மற்றும் விளையாட்டு வசதிகளை மேம்படுத்தல் போன்றவை அடங்கும்.

மேலும், கிறவல் பாதைகளை கொங்கிரீட் வீதிகளாக மாற்றுதல், கார்பட் வீதிகள் அமைத்தல், வடிகால் அகல விரிவாக்கம் மற்றும் துப்பரவு, மழைக்கால வெள்ளப் பாதிப்புகளை குறைக்கும் நடவடிக்கைகள், முறையற்ற தொலைத்தொடர்பு கம்பங்களை அகற்றுதல் போன்ற பொதுநல கோரிக்கைகளும் விவாதிக்கப்பட்டன.

அதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்களினால் நிந்தவூருக்கான கூடுதல் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. பிரதான வீதியில் உள்ள மின் மாற்றியை மாற்றுதல், அல்லிமூலை முதல் மல்கம்பிட்டி சந்தி வரை புதிய மின்சார இணைப்பு வழங்குதல், மதீனா மகா வித்தியாலயத்தின் உள்ளக வீதியை செப்பனிடுதல், வெளவாலோடை கடற்கரைப் பகுதியை சுத்தப்படுத்தி Street Food வசதிகளை ஏற்படுத்துதல், ஜேர்மன் பள்ளி பாலத்தின் நிர்மாணப்பணியை மீள ஆரம்பித்தல், நிந்தவூர் வைத்தியசாலை நாற்சந்தியில் போக்குவரத்து விளக்கு அமைத்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
மேலும், நீண்டகாலமாக திறந்துவிடப்பட்ட நீர்குழி தோண்டல்களை மூடுதல், கடலரிப்பால் பாதிக்கப்பட்ட காணிகளுக்கு நட்டஈடு வழங்குதல், நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் ஆளணி தட்டுப்பாட்டை நீக்குதல், புதிய மீன் சந்தை அமைத்தல், GPS வீதி உள்ளிட்ட பல வீதிகளை காபட் வீதிகளாக புனரமைத்தல், மத்திய வடிகான் புனரமைத்தல், இரத்த வங்கி வசதியுடன் வைத்தியசாலையை மேம்படுத்தல் போன்றவையும் விவாதிக்கப்பட்டன.
நகர அபிவிருத்தி அதிகார சபையினால் முன்மொழியப்பட்ட நிந்தவூர் பிரதான வீதியிலிருந்து மேற்குப் பகுதியில் 500 மீட்டர் வரை மண் நிரப்பி குடியிருப்பு காணிகளாக மாற்றும் திட்டம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. அதேபோல், விவசாயத்திற்கு பொருத்தமற்றதாக அடையாளம் காணப்பட்ட காணிகளை குடியிருப்பு தேவைக்காக பயன்படுத்த அனுமதி வழங்குவது குறித்தும் ஆராயப்பட்டது.

கடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நிந்தவூர் கலாச்சார மண்டப பணிகளை விரைவுபடுத்த அனுமதி பெறப்பட்டிருந்தமைவும் இக்கூட்டத்தில் நினைவுகூரப்பட்டது.
முன்வைக்கப்பட்ட அனைத்து விடயங்களும் தொடர்புடைய அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டு, அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான அஷ்ரப் தாஹிர், எம்.எஸ். உதுமா லெவ்வை, எம்.எஸ்.அப்துல் வாசித், நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர்கள், அரச திணைக்களங்களின் தலைவர்கள், பிரதேச செயலக அதிகாரிகள், கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *