இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீட மாணவர் பேரவையின் ஏற்பாட்டில், சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையிலான “சங்கமப் பொங்கல்” விழா நேற்று (10)ஆம் திகதி பீட வளாகத்தில் கொண்டாடப்பட்டது.
இவ்விழாவிற்கு கலை கலாசார பீடத்தின் அதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் தலைமை வகித்ததுடன், பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜூனைடீன் விசேட அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
இதனுடன் பல்கலைக்கழகத்தின் ஏனைய பீடங்களின் பீடாதிபதிகள், பதில் பதிவாளர், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், உதவி விரிவுரையாளர்கள், சிரேஷ்ட உதவிப் பதிவாளர், கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
விழாவிற்கு வருகைதந்த அதிதிகள் பாரம்பரிய மேள வாத்தியங்களுடன் வரவேற்கப்பட்டு விழா மேடைக்கு அழைத்துவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது. விழாவின் ஆரம்ப நிகழ்வாக மும்மத அனுஷ்டானங்கள் இடம்பெற்றதுடன், வரவேற்புரையை மாணவர் பேரவை பிரதிநிதி எஸ்.எம். சஹான் நிகழ்த்தினார்.

