சைவப்பெருஞ்சமய தைப்பூசவிழா!

இலங்கை சைவநெறிக்கழகம் மற்றும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை சங்கமன்கண்டிப்பிள்ளையார் உள்ஆலய நிருவாக சபையுடன் இணைந்து பல்வேறு சமூக அமைப்புக்களின் ஒத்துழைப்போடு இந்து சமய கலாசார திணைக்களத்தின் ஆதரவுடன் நடாத்திய சைவப்பெருஞ்சமய தைப்பூச விழாவும் வேலாயுதப்பெருமானின் வேலினை மலைமீது திருநிலைப்படுத்தும் நிகழ்வும் மாணவர்களின் கலை நிகழ்வும் கடந்த (01) காலை முதல் மாலைவரை இடம்பெற்றது.

ஆலய தலைவர் முருகானந்தமூர்த்தி தலைமையில் செயலாளர் வி.குணாளனின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற நிகழ்வுகளில் ஆறுமுகநாவலர் சபையின் தலைவரும் அகில இலங்கை இந்துமாமன்றத்தின் பிரதித்தலைவருமான சின்னத்துரை தனபால இலங்கை சைவநெறிக்கழகத்தின் தலைவரும் வைத்திய கலாநிதியுமான இ.பிரதாபன் ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் ஆ.தர்மதாசா மாவட்ட கலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி திருக்கோவில் பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் நிசாந்தினை தேவராஜ் உள்ளிட்ட ஆலயங்களின் தலைவர்கள் சமூக அமைப்புக்களின் தலைவர்கள் பொதுமக்கள் என பெருந்திராளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பெருந்திரளான அறநெறி மாணவர்களின் சமய தீட்சை மலைமீது அமர்ந்துள்ள முருகன் ஆலயத்தில் நடைபெற்றதுடன் கிரியைகளை யாழ்ப்பாணம் நல்லூர் பிள்ளையார் ஆலய குரு சிவஸ்ரீ கிருஸ்ண ஜனேந்திரக்குருக்கள் நடாத்தி வைத்தார். பின்னர் மலைமீது முருகனின் வேல் கற்சிலையினையும் அருணகிரிநாதர் மற்றும் பாம்பன் சுவாமிகளின் சிலைகளும் திருநிலைப்படுத்தப்பட்டன.

இதன் பின்னராக பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதுடன் ஆலயத்தில் அமைக்கப்பட்ட விசேட மேடையில் அறநெறி மாணவர்களின் கலை நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டன.

தொடர்ந்து இலங்கை சைவநெறிக்கழகம் மற்றும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை இணைந்து சைவத்திற்கு பெருந்தொண்டாற்றிய முன்னாள் ஆலய செயலாளர் வே.சந்திரசேகரம் அவர்களுக்கு விசேட நினைவுச்சின்னம் வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவித்ததுடன் இன்னும் பலரும் கௌரவிக்கப்பட்டனர்.

இதேநேரம் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தினரால் தெரிவு செய்யப்பட்ட 50 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதியும் வழங்கி வைக்கப்பட்டன.
நிறைவாக கலந்து கொண்ட அமைப்புக்களுக்கு அறநெறி தொடர்பான புத்தகங்களும் வழங்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *