மயிலிட்டி மீனவர்கள் தமது சொந்த இடங்களை விடுவிக்கக் கோரித் தொடர்ச்சியாகப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் மக்களின் காணிகள் கையகப்படுத்தப்பட்டு, அவை இராணுவத் தேவைகளுக்குப் பதிலாக வெங்காயம், மிளகாய் போன்ற விவசாயப் பயிர்ச்செய்கைகளுக்கும் வியாபாரத்திற்கும் பயன்படுத்தப்படுவது கண்டிக்கத்தக்கது என கிழக்கு பல்கலைக்கழகத்தின் வருகைவிரிவுரையாளர் பேராசிரியர் சூசை ஆனந்தன் தெரிவித்தார்.
உலகளாவிய ரீதியில் அனுசரிக்கப்படும் சர்வதேச மீனவர் தினம் மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது.
மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் சமூகங்களின் வாழ்வாதாரம் மற்றும் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் இத்தினம் முக்கியத்துவம் பெறுகின்றது.
இந்த ஆண்டுக்கான சர்வதேச மீனவர் தினம், “மாற்றத்திற்காக மக்களை வலுப்படுத்தல்: மீன்பிடி மற்றும் உயிரின வளர்ப்புத்துறையில், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கான கண்ணியமான தொழில் வாய்ப்புகளை மேம்படுத்தல்” எனும் தொனிப்பொருளை மையமாகக் கொண்டு அனுஸ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு தன்னாமுனையில் வடக்கு கிழக்கு இளைய மீனவர் கூட்டு அமைப்பின் ஏற்பாட்டிலும் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனம் முழுமையான அனுசரணையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆர். கிருபராஜ், கிழக்கு பல்கலைக்கழக வருகை விரிவுரையாளர் பேராசிரியர் சூசை ஆனந்தன், கடற்றொழில் மற்றும் நீரியல் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ஏ. மனோகரன், மட்டக்களப்பு கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் மற்றும் நன்னீர் மீன்பிடித் திணைக்கள உதவி ஆணையாளர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.
மேலும், கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்கள சம்மேளனத் தலைவர் மெ. இளஞ்செழியன், கூட்டுறவு அபிவிருத்தி திணைக்கள சம்மேளனத் தலைவர், மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனத்தின் பணிப்பாளர் நாட்சன் பிகிராடோ, கிழக்கு மாகாண மீனவர் தொழிற்சங்கத் தலைவர் என். பத்மநாதன் மற்றும் வடக்கு மாகாண மீனவர் தொழிற்சங்கத் தலைவர் பா. அன்னராசா ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இவர்களுடன் யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சமாசத் தலைவர்கள் மற்றும் குடிசார் அமைப்புக்களின் மாவட்டச் சம்மேளனப் பிரதிநிதிகளும் பங்குபற்றினர்.
இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர்,
இலங்கையின் மீன் உற்பத்தியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. நாட்டின் மொத்த மீன் உற்பத்தியில் சுமார் 50 முதல் 60 சதவீதம் வரை இவ்விரு மாகாணங்களிலிருந்தே பெறப்பட்டு வந்த போதிலும், தற்போது அந்த அளவு கணிசமாகக் குறைந்துள்ளது. குறிப்பாகக் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, முல்லைத்தீவு, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் கரையோரத்திலிருந்து 200 கடல் மைல் தூரம் வரை சென்று மீன்பிடிக்கும் வாய்ப்புகள் இருந்தும், அவற்றை முழுமையாகப் பயன்படுத்த முடியாத சூழலே நிலவுகிறது. அதேபோல், வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணக் குடாநாடு, தீவகப் பகுதிகள் மற்றும் மன்னார் ஆகிய பிரதேசங்களில் இந்தியக் கடல் எல்லைக் கோடு மிக அருகில் அமைந்துள்ளதால், எல்லை தாண்டிச் சென்று மீன்பிடிக்க முடியாத நிலை காணப்படுகிறது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இயற்கையாகவே மிகச் சிறந்த கடல் மற்றும் நன்னீர் மீன் வளங்களைக் கொண்டுள்ளன. மட்டக்களப்பு வாவி, கொக்கட்டிச்சோலை, நாயாறு, யாழ்ப்பாணக் குடாநாடு மற்றும் ஆனையிறவு ஆகிய பகுதிகள் மீன்பிடித் தொழிலுக்கு மிகவும் உகந்தவையாகும். 1980-ஆம் ஆண்டுக்கு முன்னர், குறிப்பாக 1983-ஆம் ஆண்டில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் மட்டும் சுமார் 82,000 மெட்ரிக் டன் மீன் உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால், இன்று 20,000 மெட்ரிக் டன் அளவைக் கூட எட்ட முடியாத பின்தங்கிய நிலையிலேயே யாழ்ப்பாணக் குடாநாடு உள்ளது.
கடந்த கால யுத்தத்தினால் கரையோர மீனவச் சமூகமே மிக மோசமான பாதிப்புகளைச் சந்தித்தது. கிழக்கு மாகாண மீனவர்கள் பாதிப்புகளை எதிர்கொண்ட போதிலும், வடக்கு மாகாண மீனவர்கள் படுகொலைகளையும் பாரிய இடம்பெயர்வுகளையும் சந்தித்தனர். இதன் விளைவாக, 65,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் தமிழ்நாட்டிற்கு இடம்பெயர்ந்து இன்றும் அங்கேயே தங்கியிருக்கின்றனர். அதேபோல், உள்நாட்டிற்குள்ளேயே இடம்பெயர்ந்த பல மீனவக் குடும்பங்களும் இதுவரை தமது சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாத அவல நிலையில் உள்ளனர்.

