போதைப்பொருட்களுடன் பிடிபட்ட மீன்பிடிப் படகு காலி துறைமுகத்திற்கு மாற்றம்!

தெற்கு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மூடைகளை ஏற்றிச் சென்ற ஆழ்கடல் மீன்பிடிப் படகும், அதில் பயணித்த ஐந்து சந்தேக நபர்களும் காலி துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது குறித்த படகு சுற்றிவளைக்கப்பட்டு சோதனையிடப்பட்டதையடுத்து, அதிலிருந்த போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்டதுடன், ஐந்து சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பின்னர் மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக குறித்த படகு, போதைப்பொருட்கள் மற்றும் சந்தேக நபர்கள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையைச் சுற்றியுள்ள கடற்பரப்புகளில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் நோக்கில் கடற்படையினர் தொடர்ச்சியாக விசேட கண்காணிப்பு மற்றும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கடந்த நவம்பர் 5ஆம் திகதி தெற்கு ஆழ்கடலில் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு நடவடிக்கையின்போது 132 கிலோகிராமிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளும், 57 கிலோகிராமிற்கும் அதிகமான ஹெரோயினும் கைப்பற்றப்பட்டதுடன், ஐந்து சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

குறித்த போதைப்பொருட்களின் மொத்த மதிப்பு 4.2 பில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என கடற்படை தெரிவித்திருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *