சிவராஜா அனோஜனுக்கு எதிராக சவூதி அரேபிய நீதிமன்றம் விதித்திருந்த அனைத்துக் குற்றச்சாட்டுக்களிலிருந்தும் அவர் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளதாக, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். சிவராஜா அனோஜனை அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுதலை செய்வதற்கு சவூதி அரேபிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் அந்த வகையில் சிவராஜா அனோஜனை விரைவில் நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுப்பதாகவும் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில், விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று வெளிவிவகார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போதே அமைச்சர் இந்த மகிழ்ச்சியான தகவலை பகிரங்கமாக அறிவித்துள்ளார். சவூதி அரேபியாவில் முன்பதாக மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த கிழக்கு மாகாண கல்முனை பிரதேச தமிழ் இளைஞரான சிவராசா அனோஜனுக்கு எதிரான வழக்கை கைவிடுவதற்கு, சவூதி அரேபியாவின் அரச தரப்பு வழக்குத் தொடுநர் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இதன் மூலம் அவரது முழுமையான விடுதலை உறுதியாகியுள்ள நிலையில், இன்னும் ஓரிரு வாரங்களுக்குள் அவர் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார்.இந்த மகிழ்ச்சியான தகவலைத் தொடர்ந்து, சிவராசா அனோஜனின் குடும்பத்தினர் கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சிற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா ஆகியோர் அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்துள்ளனர்.
சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த அனோஜன் சிவராசா (27) சமூக வலைத்தளப் பதிவு ஒன்றில் மேற்கொண்ட சர்ச்சைக்குரிய கருத்து காரணமாக, சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தார்.
சிவராசா அனோஜனின் மரண தண்டனையை இரத்து செய்ய இலங்கை அரசாங்கம் தீவிர இராஜதந்திர மற்றும் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்தது.வக்கீல்
சொலிசிட்டர் ஜெனரல் அசர்ட் நவாவி தலைமையிலான சட்ட நிபுணர்கள் குழு சவூதி அரேபியாவுக்குச் சென்று மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்ததுடன், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தரப்பிலிருந்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.சவூதி அரேபிய உச்ச நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட தொடர் சட்ட ரீதியான நடவடிக்கைகளின் பலனாக மரண தண்டனை இரத்து செய்யப்பட்டதுடன், தற்போது அரச தரப்பு வழக்குத் தொடுநர் திணைக்களம் வழக்கை முழுமையாக கைவிட தீர்மானித்துள்ளது.
இந்த வழக்கில் நீதியை நிலைநாட்டத் துணை நின்ற அனைத்துத் தரப்பினருக்கும், அரச அதிகாரிகளுக்கும் மற்றும் குரல் கொடுத்த பொதுமக்களுக்கும் அனோஜனின் குடும்பத்தினர் தங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

