மட்டக்களப்பில் 24 மில்லியன் செலவில் புதிய உப தபாலகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா!

கிளின் ஸ்ரீ லங்கா தேசிய செயற்றிட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுமக்களின் தகவல் தொடர்பாடல் வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் தொடர்ச்சியாக அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன் ஒரு கட்டமாக, இந்த ஆண்டில் மாவட்டத்தின் மூன்றாவது தபால் நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா மாகாண தபால் திணைக்களத்தின் நிர்வாகப் பணிப்பாளர் கே. பிரகாஷ் தலைமையில் நேற்று (11) காலை நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கந்தசாமி பிரபு அவர்கள் கலந்துகொண்டு மட்டக்களப்பு நகரின் நீண்ட நாள் தேவையாக இருந்த கோட்டைமுனை பிரதேசத்திற்கான புதிய உப தபாலகத்திற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

கடந்த பல ஆண்டுகளாக வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வந்த இந்தத் தபால் நிலையத்திற்கு, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்திற்கு இணங்க, பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்களின் முயற்சியால் தற்போது புதிய சொந்தக் கட்டிடம் அமைக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன், மாநகரசபை ஆணையாளர் என். தனஞ்செயன், மாநகரசபை உறுப்பினர்கள், மாவட்ட தபால் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *