இலங்கையில் நடைபெறவுள்ள உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் 60வது ஆண்டு நிறைவு விழாவின் ஏற்பாட்டுப் பணிகளின் முன்னேற்றம் குறித்த கலந்துரையாடல், உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் வணக்கத்திற்குரிய கலாநிதி போதாகம சந்திம நாயக்க தேரர், உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் கலாநிதி மாஇடிபே விமலசார மகா நாயக்க தேரர் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (26) பிற்பகல் நடைபெற்றது.
இந்த விழா எதிர்வரும் நவம்பர் மாதம் 28ஆம் திகதி களனி நாகானந்த பௌத்த பல்கலைக்கழகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பமாகி, டிசம்பர் 02ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வின் சில முக்கிய அங்கங்கள் அனுராதபுரத்திலும் கண்டி நகரிலும் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இந்த கலந்துரையாடலின்போது சுட்டிக்காட்டப்பட்டது.

