மட்டக்களப்பு மாவட்டத்தில் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ற பசுமை விவசாய முறைகளைக் கடைப்பிடித்து சிறப்பாகச் செயற்பட்ட விவசாயிகளைக் கௌரவிக்கும் Green Farmer Awards 2026 விருது வழங்கும் நிகழ்வு இன்று (22) சதுருக்கொண்டான் மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.
மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் எம். பரமேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான ஜே.எஸ். அருள்ராஜ் அவர்கள் கலந்துகொண்டார்.
மாவட்ட விவசாயத் திணைக்களமும் கிழக்குப் பல்கலைக்கழக விஞ்ஞான முன்னேற்றக் கழகமும் இணைந்து ஏற்பாடு செய்த இவ் விவசாய போட்டியில் மதிப்பீட்டுப் புள்ளிகளின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட விவசாயிகளுக்குச் சான்றிதழ்களும் பணப்பரிசில்களும் வழங்கப்பட்டது.
வர்த்தக விவசாயத்தை மேம்படுத்தும் முகமாக காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப சிறந்த விவசாய நடைமுறைகளைப் பின்பற்றுதல் விதைகள், நீர் மற்றும் உரங்களின் வினைத்திறனான பயன்பாட்டை மேம்படுத்துதல், வெற்றிகரமான விவசாயப் புத்தாக்கங்களையும் சிறந்த நடைமுறைகளையும் விவசாய சமூகத்தினரிடையே பரப்புதல் ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
நவீன தொழில்நுட்பங்களையும் விஞ்ஞான அடிப்படையிலான விவசாய முறைகளையும் பயன்படுத்துவதன் மூலம் விவசாய உற்பத்தியை அதிகரித்து, விவசாயிகளின் வருமானத்தையும் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த முடியும் என இந்நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழக விஞ்ஞான முன்னேற்றக் கழகத் தலைவரும் பொறியியலாளருமான ரீ.விநோத்ராஜ், கிழக்குப் பல்கலைக்கழக விஞ்ஞான முன்னேற்றச் சங்கத்தின் B பிரிவுத் தலைவர் பேராசிரியர் நிரஞ்சனா ரொட்னி பெர்னாண்டோ உள்ளிட்ட உயர் அதிகாரிகள், விரிவுரையாளர்கள், விவசாய போதனா ஆசிரியர்கள், அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் எனபலரும் கலந்துகொண்டனர்.

