மட்டக்களப்பில் ஆயுர்வேத வைத்தியர்களுக்கு தொழுநோய் விழிப்புணர்வு நிகழ்வு!

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைப் பிரிவின் கீழ் கடமையாற்றும் ஆயுர்வேத வைத்திய அதிகாரிகளுக்கான தொழுநோய் தொடர்பான விழிப்புணர்வுச் செயலமர்வு மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளருமான வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரன் தலைமையில் கிழக்கு மாகாண ஆயுர்வேத ஆணையாளர் வைத்தியர் எம்.ஏ. நபில் பங்குபற்றுதலுடன் மட்டக்களப்பு மார்பு நோய் சிகிச்சை நிலையத்தின் மாநாட்டு மண்டபத்தில் இன்று (22) நடைபெற்றது.

மாவட்ட தொழுநோய்த் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி வைத்தியர் திருமதி லுபோஜிதா கமல்ராஜ் ஏற்பாட்டில் பொது சுகாதாரப் பரிசோதகர் எஸ். தீபக்குமாரனின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இச்செயலமர்வில் தொழுநோய் தொடர்பான விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வின் வளவாளராகக் கலந்துகொண்ட மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தோல்நோய்  வைத்திய நிபுணர் தனுஷா பாலேந்திரன் தொழுநோயின் அறிகுறிகள், நோய் பரவும் விதம், அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் சிகிச்சை முறைகள் தொடர்பான விளக்கங்களை வழங்கினார்.

இதன் போது கருத்து தெரிவித்த தொழுநோய்த் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி லுபோஜிதா கமல்ராஜ் அவர்கள் நாடளாவிய ரீதியில் தொழுநோயாளர்கள் அதிகளவில் காணப்படும் மாவட்டங்களில் மட்டக்களப்பு மாவட்டம் காணப்படுவதாக சுட்டிக்காட்டியதுடன் தொழுநோயை முற்றாகக் குணப்படுத்த முடியும் ஆரம்ப நிலையிலேயே உரிய சிகிச்சையைப் பெற்றுக்கொள்வதன் மூலம் நோயினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கவும், அவயவ இழப்புகளைத் தவிர்க்கவும் முடியும் என சுட்டிக் காட்டினார்.

இதன் போது தொழுநோயின் இயல்புகள், நோயினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள், நோய்த்தொற்றினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் ஆரம்பகால சிகிச்சையின் முக்கியத்துவம் தொடர்பாகவும் இதன்போது விளக்கமளிக்கப்பட்டது.

மக்கள் மத்தியில் தொழுநோய் தொடர்பான போதிய விழிப்புணர்வின்மை மற்றும் மூடநம்பிக்கைகள் காரணமாக நோயைக் கண்டறிந்து சிகிச்சை பெறுவதில் தாமதங்கள் காணப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *