சிம்பாப்வேயை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது இந்தியா!

இந்தியா – சிம்பாப்வே அணிகளுக்கு இடையில் நடைபெற்ற 3வது ரி20 போட்டியில், இந்திய அணி 92 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்ந்தெடுத்தது. அதன்படி களமிறங்கிய இந்திய வீராங்கனைகள் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 216 ஓட்டங்கள் குவித்தனர்.

தொடக்க வீராங்கனைகளான ஷபாலி வர்மா 69 ஓட்டங்களும், அனுஷ்கா சர்மா 28 ஓட்டங்களும் எடுத்து நல்ல தொடக்கம் அளித்தனர்.அதன்பின் ஹர்மன்பிரீத் கவுர் அதிரடியாக விளையாடி 41 பந்துகளில் 91 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதையடுத்து 217 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிம்பாப்வே அணி களமிறங்கியது.

இதற்கமைய, சிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 124 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 92 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அந்த அணி சார்பில் களமிறங்கிய, ஷர்னே மேயர்ஸ் 60 ஓட்டங்களும், பிலவட் பிஸா 40 ஓட்டங்களும் எடுத்தனர்.

இந்தியா சென்றுள்ள சிம்பாப்வே மகளிர் கிரிக்கெட் அணி, 3 ரி20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்த ரி20 தொடரை 2-0 என்ற கணக்கில் ஏற்கெனவே இந்தியா கைப்பற்றியுள்ளது.

முதல் ரி20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து நடைபெற்ற 2வது போட்டியில், 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தற்போது மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *