மட்டக்களப்பு மாவட்டம், போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பழுகாமம் மாவேற்குடா கிராம உத்தியோகஸ்தர் பிரிவின் கொக்குநாரை பகுதியில் காட்டு யானைகள் மேற்கொண்ட தொடர்ச்சியான அட்டகாசத்தினால் விவசாயப் பயிர்கள் முற்றிலுமாகத் துவம்சம் செய்யப்பட்டுள்ளன.
இன்று (17.10.2026) அதிகாலை இப்பகுதிக்குள் புகுந்த காட்டு யானைகளே இவ்வாறு கடுமையான சேதங்களை ஏற்படுத்தியுள்ளன.
இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட இந்த அழிவுகளுக்கு மேலதிகமாக, நேற்றும் (16.10.2026) இப்பகுதிக்கு வருகை தந்த காட்டு யானைகள் விவசாய நிலங்களில் பயிர்களை நாசம் செய்துள்ளதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இக்காட்டு யானைகளின் தீவிர தாக்குதலால் விவசாயத் தோட்டப் பயிர்கள் மற்றும் புதிதாக வளர்க்கப்பட்ட மாங்கன்றுகள், மரவள்ளி, தென்னங்கன்றுகள் உள்ளிட்டவை பெருமளவில் சேதமடைந்துள்ளன.
முற்காலத்தில் எல்லைக் கிராமங்களில் மாத்திரம் காணப்பட்ட காட்டு யானைகள், தற்போது பொதுமக்கள் செறிந்து வாழும் கிராமங்களுக்குள் ஊடுருவி வருவதால், மக்கள் இரவு வேளைகளில் வீட்டை விட்டு வெளியே நடமாட முடியாதளவுக்குப் பெரும் அச்சத்துடன் வாழும் இக்கட்டான சூழல் உருவாகியுள்ளது.
தொடர்கதையாகிவரும் இந்த யானைகளின் தொல்லைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்குமாறு கோரி, அப்பகுதி மக்கள் அவசர கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு முன்வைத்துள்ளனர்.
சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, காட்டு யானைகளால் பாதிக்கப்பட்ட பயிர்கள் மற்றும் தோட்டங்களைப் பார்வையிட்டு உரிய நஷ்டஈட்டைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிராமங்களுக்குத் தொடர்ச்சியாக நுழைந்துவரும் காட்டு யானைகளிடமிருந்து பொதுமக்களின் உயிர்ப் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு வனவிலங்குத் திணைக்களமும் உரிய அதிகாரிகளும் உடனடித் தீர்வுகளை வழங்க வேண்டும்.
பாதுகாப்பற்ற சூழலில் நாளாந்தம் பீதியுடன் வாழ்ந்துவரும் கொக்குநாரை கிராம மக்களின் துயரைக் களைந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பார்களா என்ற எதிர்பார்ப்புடன் கிராமவாசிகள் காத்திருக்கின்றனர்.

