சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தை, காலவரையறையின்றி ஒத்திவைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
குறித்த பிரேரணையில் சில தொழில்நுட்ப விடயங்கள் உள்ளடங்கியுள்ளதால், அது தொடர்பில் சட்ட மாஅதிபரின் ஆலோசனையைப் பெற வேண்டியுள்ளதாக அரசாங்கத் தரப்பு கூட்டத்தில் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த 9ஆம் திகதி, எதிர்க்கட்சியைச் சேர்ந்த 44 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளிக்கப்பட்டது.
சபாநாயகருக்கு எதிராக மொத்தம் 50 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேரணை பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்திலும் உள்ளடக்கப்பட்டிருந்தது.

