லொகு பெட்டி’ எனப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவின் பிரதான துப்பாக்கிதாரியாகக் கருதப்படும் ‘அல்மேதா’ என்பவரின் மரணம் தொடர்பில், காலி மாவட்ட குற்றப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜூன் மாதம், காலி – வக்வெல்ல பகுதியில் கிங் கங்கைப் பாலத்திற்கு அருகில் அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
குறித்த நபரின் கை, கால்கள் கட்டப்பட்டிருந்ததுடன், அவரது உடல் கொங்கிரீட் தூண் ஒன்றுடன் கட்டப்பட்டிருந்தது. மேலும், அவரது முகமும் கடுமையாகச் சிதைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், உயிரிழந்தவர் ‘லொகு பெட்டி’ குற்றக் குழுவின் பிரதான துப்பாக்கிதாரியாகக் கருதப்படும் ‘அல்மேதா’ என்பது தெரியவந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் தொடர்ச்சியாக, காலி மாவட்ட குற்றப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

