மட்டக்களப்பில் கிழக்கு மற்றும் தெற்கு கரையோரப் பிராந்தியங்கள் அபிவிருத்தி தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல்!

இலங்கையின் கிழக்கு மற்றும் தெற்கு கரையோரப் பிராந்தியங்களின் சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் நிலையான அபிவிருத்தி தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் சுற்றாடல் அமைச்சின் உயிர்பல்வகைமைப் பிரிவின் பணிப்பாளர் மோஹான் ஹீ நெட்டிகல அவர்களின் பங்குபற்றுதலுடன் புதிய மாவட்ட செயலகத்தில் இன்று (08) இடம்பெற்றது.

சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் கரையோரச் சுற்றாடல் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள், கண்டல் தாவரங்கள் மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாத்தல், கரையோரப் பகுதிகளின் நிலையான அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது, அரச நிறுவனங்கள், உள்ளூராட்சி அமைப்புகள், தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் ஏனைய பங்குதாரர்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களது கருத்துகளையும் முன்மொழிவுகளையும் முன்வைத்தனர்.

மேலும், கரையோரப் பிராந்தியங்களின் சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் நிலையான அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் தேசிய திட்ட இணைப்பாளர் சுகந்தி, கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் ஏ.எல்.எம்.அஸ்மி, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் வி.நவநிதன், உயர் அதிகாரிகள், துறைசார் நிபுணர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *