கிழக்குக் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த பல நாள் மீன்பிடிப் படகில் உடல்நலக்குறைவுக்கு உள்ளான மீனவர் ஒருவர் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டு, மருத்துவ சிகிச்சைக்காக திருகோணமலை பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
‘வெனுஷ புதா’ என்ற பல நாள் மீன்பிடிப் படகு கடந்த முதலாம் திகதி திருகோணமலை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்றுள்ளது. திருகோணமலைக்கு அப்பால் சுமார் 11 கடல் மைல் தொலைவில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தபோது, படகில் இருந்த மீனவர் ஒருவர் கடுமையான உடல்நலக்குறைவுக்கு உள்ளானார்.
இதையடுத்து, மீனவருக்கு அவசர மருத்துவ உதவி வழங்குமாறு மீன்பிடி மற்றும் நீர்வளத் திணைக்களம் கொழும்பு கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையத்திடம் (MRCC) கோரிக்கை விடுத்தது.
அதனைத் தொடர்ந்து, கிழக்குக் கடற்படை கட்டளையின் ‘P 460’ அதிவேக தாக்குதல் படகு மீட்பு நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டது. கடற்படையினரால் மீட்கப்பட்ட மீனவருக்கு படகிலேயே முதலுதவி வழங்கப்பட்ட பின்னர், திருகோணமலை துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
பின்னர் அவர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை மாவட்ட பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இலங்கையின் தேடல் மற்றும் மீட்பு கடற்பரப்பில் ஆபத்தில் சிக்கும் கடல்சார் மற்றும் மீன்பிடிச் சமூகத்தினருக்கு அவசர உதவிகளை வழங்குவதற்காக, கொழும்பு MRCC உடன் இணைந்து இலங்கை கடற்படை தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.

