ஐக்கிய அரபு அமீரகத்தில் எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் நீர் மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் உத்தியோகபூர்வ அழைப்பு விடுத்துள்ளது.
இலங்கைக்கான ஐக்கிய அரபு அமீரகத் தூதுவர் காலித் நாசர் அல் அமீருக்கும் பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் இடையில் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, டிட்வா சூறாவளியைத் தொடர்ந்து இலங்கைக்கு ஐக்கிய அரபு அமீரக அரசாங்கம் வழங்கிய ஒத்துழைப்புகளுக்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்.
நீர் முகாமைத்துவம் மற்றும் நீர் பாதுகாப்பு தொடர்பான சவால்கள் குறித்தும் இரு தரப்பினரும் கலந்துரையாடியதுடன், நீர் பிரச்சினைகளுக்கு நிலையான நீண்டகாலத் தீர்வுகளை உருவாக்குவதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இலங்கை திறமையான தொழிலாளர்களுக்கான சர்வதேச வேலைவாய்ப்பு வாய்ப்புகளை விரிவுபடுத்துதல், தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்விக்கு ஆதரவு, விவசாயத் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இலங்கையின் துறைமுகங்கள் மற்றும் விமானச் சேவைத் துறைகளில் ஐக்கிய அரபு அமீரக முதலீட்டாளர்களின் ஆர்வம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதுடன், இலங்கையை பிராந்திய விமானப் பராமரிப்பு மையமாக அபிவிருத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இலங்கை – ஐக்கிய அரபு அமீரக இருதரப்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும் சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

