மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதிய சிறுநீரகப் பராமரிப்பு பிரிவு திறப்பு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதிதாக நிறுவப்பட்ட சிறுநீரகப் பராமரிப்பு பிரிவு (Renal Care Unit) இன்று வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

வைத்தியசாலையின் பணிப்பாளர் ஆர். முரளீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் அனில் ஜயசிங்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தைத் திறந்து வைத்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுநீரக நோயாளர்களுக்கான சிகிச்சை மற்றும் பராமரிப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் இந்தப் புதிய பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை போதிய சிகிச்சை மற்றும் தனியான கட்டிட வசதிகள் இல்லாததால் நோயாளர்கள் எதிர்கொண்ட சிரமங்களுக்கு தீர்வாக இப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

நிகழ்வில் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சாலின்ட பண்டார உள்ளிட்ட அமைச்சின் உயர் அதிகாரிகள், வைத்திய நிபுணர்கள், வைத்தியசாலை நிர்வாகிகள், தாதியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது சிறப்பாக சேவையாற்றிய வைத்தியசாலை உத்தியோகத்தர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

மேலும், எதிர்வரும் ஆண்டில் பல மில்லியன் ரூபாய் பெறுமதியில் மகப்பேற்று சிகிச்சைப் பிரிவு கட்டிடத்தை அமைப்பதுடன், வைத்தியசாலையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என சுகாதார அமைச்சின் செயலாளர் உறுதியளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *