2026ஆம் ஆண்டுக்கான பாடசாலை போசாக்கு வேலைத்திட்டத்திற்காக அரசாங்கம் 33,600 மில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற தேசிய பாடசாலை போசாக்கு மாநாடு 2026 இல் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போது நாடளாவிய ரீதியில் 8,990 பாடசாலைகளைச் சேர்ந்த 15 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இந்த வேலைத்திட்டத்தின் மூலம் பயனடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலை மாணவர்களின் போசாக்கை மேம்படுத்துவதுடன், நாட்டில் நிலவும் தொற்றா நோய்கள் மற்றும் போசாக்கின்மை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையிலும் இந்த வேலைத்திட்டத்தை விரிவுபடுத்த எதிர்பார்ப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
மேலும், பாடசாலை போசாக்கு வேலைத்திட்டத்தை விவசாயிகள், மீனவர்கள் மற்றும் கூட்டுறவு அமைப்புகளுடன் இணைத்து உள்ளூர் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதுடன், உணவு வீண்விரயம் மற்றும் நிலைபேறான உணவு முறைகள் தொடர்பிலும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

