பசுபிக் கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – டொங்காவை உலுக்கிய அதிர்வு

பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள டொங்கா (Tonga) தீவு நாட்டுக்கு அருகே இன்று 7.6 மெக்னிடியூட் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அந்நாட்டின் தலைநகரில் அபாய எச்சரிக்கை சமிக்ஞைகள் ஒலிக்கப்பட்ட போதிலும், பின்னர் சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என அறிவிக்கப்பட்டது.
இந்த இயற்கை அனர்த்தத்தினால் ஏற்பட்ட உயிர்ச் சேதங்கள் அல்லது சொத்துச் சேதங்கள் குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தலைநகரான நுக்குஅலோபா (Nuku’alofa) பகுதியில் அபாய எச்சரிக்கை ஒலிகள் பின்னணியில் ஒலித்துக் கொண்டிருக்கும்போது, அங்கிருந்த மக்கள் கட்டிடங்களின் கூரைகள் மீது தஞ்சமடைந்திருக்கும் காட்சிகள் டொங்கா வானொலிக் கூட்டுத்தாபனத்தினால் (TBC) வெளியிடப்பட்டுள்ளன.
முன்னதாக, டொங்காவின் தேசிய பேரிடர் இடர் மேலாண்மை அலுவலகம் கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கையை விடுத்திருந்ததுடன், மக்கள் உடனடியாக உயரமான இடங்களுக்கு அல்லது நிலப்பகுதியை நோக்கிச் செல்லுமாறு அறிவுறுத்தியிருந்தது.
இருப்பினும், பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் பின்னர் வெளியிட்ட அறிவிப்பில், இந்த நிலநடுக்கமானது பூமியின் உட்பகுதியில் மிகவும் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதால் சுனாமி அச்சுறுத்தல் இல்லை” என்று குறிப்பிட்டிருந்தது.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தரவுகளின்படி, இந்த நிலநடுக்கம் சுமார் 238 கிலோமீட்டர் (148 மைல்) ஆழத்தில் நிகழ்ந்துள்ளதுடன், இதன் மையப்புள்ளி நெயியாஃபு (Neiafu) நகரில் இருந்து சுமார் 150 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *