மூட்டு வலிக்கு சிறந்த தீர்வு!

ஒவ்வொருவரும் தினமும் ஏதாவது ஒரு ஆரோக்கிய பிரச்சனையால் சிரமப்படுவதுண்டு. அதுவும் தற்போது மூட்டு வலியால் அவதிப்படுபவர்களோ ஏராளம். இந்தியாவில் மட்டும் சுமார் 180 மில்லியனுக்கும் அதிகமானோர் ஏதாவது ஒரு வகை ஆர்த்ரிடிஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு வயதானோர் மற்றும் உடல் பருமனால் அவதிப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பது ஓர் காரணம்.

ஆர்த்ரிடிஸ் என்பது மூட்டுக்களில் பாதிப்பை ஏற்படும் ஒரு நோய் ஆகும். மூட்டுகள் என்பவை உடலின் இரண்டு எலும்புகள் சந்திக்கும் இடங்களாகும். சில மூட்டுகள் வயது அதிகரிக்கும் போது தேய்மானமடையும். இப்படி நீண்ட காலமாக மூட்டுகள் தேய்மானமடைவதால் நிறைய பேருக்கு ஆர்த்ரிடிஸ் ஏற்படும். இந்த ஆர்த்ரிடிஸில் பல வகைகள் உள்ளன. அதில் சில வகையான ஆர்த்ரிடிஸ் மூட்டுகளை பாதிக்கும் காயங்களுக்கு பின் ஏற்படுகின்றன. இன்னும் சில குறிப்பிட்ட சில ஆரோக்கிய பிரச்சனைகளால் ஏற்படுகின்றன.

ஒருவரது மூட்டுகள் பாதிக்கப்படும் போது, அது நடப்பது, கை, கால்களை அசைப்பது அல்லது தினசரி வேலைகளை செய்வதைக் கூட கடினமாக்குகிறது. ஆர்த்ரிடிஸ் என்பது ஒரே ஒரு நோய் அல்ல. அதில் 100-க்கும் அதிகமான கோளாறுகள் அடங்கியிருக்கும். இந்த ஆர்த்ரிடிஸை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டால், நோய் தீவிரமாவதைத் தடுக்கலாம். ஆர்த்ரிடிஸ் தீவிரமாகிவிட்டால், பின் நடப்பது என்பதே கனவாகிவிடும். இப்போது ஆர்த்ரிடிஸின் ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

1. வலி

ஆர்த்ரிடிஸின் முதன்மையான அறிகுறி மூட்டு வலி. இந்த வலியானது மிதமானதாகவோ அல்லது எரிச்சல் உணர்வு போன்றோ இருக்கலாம். அதுவும் மூட்டுக்களை அளவுக்கு அதிகமாக பயன்படுத்திய பின் வலியை சந்திக்க நேரிடும். அதுமட்டுமின்றி, காலையில் எழுந்ததும் வலியை உணரக்கூடும். இன்னும் சிலருக்கு காலநிலை மிகவும் குளிர்ச்சியாக இருந்தால், வலியை சந்திக்கக்கூடும். எனவே இப்படி மூட்டுக்களில் அதிக வலியை வழக்கத்திற்கு மாறாக உணர்ந்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.

2. வீக்கம் அல்லது அழற்சி

மூட்டுக்களில் வலி அதிகரிக்கும் போது, வீக்கத்தையும் சந்திக்கிறீர்களா? அப்படியானால் மூட்டுக்களில் சைனோவியல் திரவங்கள் அளவுக்கு அதிகமாக தேங்கியுள்ளது என்று அர்த்தம். பொதுவாக சைனோவியல் திரவங்கள் மூட்டுக்களில் இருக்கும். இது மூட்டுக்கள் தேய்மானமடையாமல் இருக்க ஒரு மசகு எண்ணெய் போல் செயல்படுகிறது. ஆனால் எப்போது மூட்டுக்களில் பிரச்சனை அதிகரிக்கிறதோ, அப்போது இந்த திரவம் அளவுக்கு அதிகமாக தேங்கி வீக்கத்தை உண்டாக்கும்.

3. வலியுடன் விறைப்பு

மூட்டுக்களில் வலியுடன் விறைப்பும் இருந்தால், அது ஆர்த்ரிடிஸின் முக்கியமான எச்சரிக்கை அறிகுறிகளுள் ஒன்றாகும். இந்த அறிகுறிகள் பெரும்பாலும் மூட்டுக்குள் வீக்கம், சேதம் அல்லது தேய்மானத்தைக் குறிக்கின்றன. இதன் விளைவாக அடிக்கடி இயக்கம் குறைதல், வீக்கம், வெப்ப உணர்வு போன்றவை ஏற்படுகிறது.

4. மூச்சுத் திணறல்

ஆர்த்ரிஸின் அறிகுறிகள் வெறும் மூட்டுகளில் மட்டும் தெரியாது. நாள்பட்ட மூச்சுத்திணறல் கூட அழற்சி வகை ஆர்த்ரிடிஸால் ஏற்படும் சிக்கல்களின் முக்கிய அறிகுறியாகும். அதுவும் ருமடாய்டு ஆர்த்ரிடிஸின் அறிகுறியாகும். இது இந்த மூட்டு அழற்சியானது அப்படியே நுரையீரல் வரை பரவி நுரையீரலையும் பாதித்து, நுரையீரலில் வீக்கத்தை ஏற்படுத்தி, இடைநிலை நுரையீரல் நோய், ப்ளூரிசி அல்லது மூச்சுக்குழாய் அழற்சி போன்ற நிலைமைகளுக்கு வழிவகுக்கும். ஆகவே மூட்டு வலியுடன், மூச்சுத்திணறல், உடல் சோர்வு, வறட்டு இருமல் போன்றவற்றை ஒன்றாக அனுபவித்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *