உடற்பயிற்சிக்கு பின் சோர்வா-இந்த பயிற்சிகளை கட்டாயம் செய்ய வேண்டும்!

உடற்பயிற்சிக்கு முன்னர் வார்ம்-அப் செய்வது போலவே உடற்பயிற்சிக்கு பின்னர் கூல்-டவுன் பயிற்சிகளை கட்டாயம் செய்ய வேண்டும்.

உடற்பயிற்சி செய்யும் பலரும் செய்யும் ஒரு தவறு, உடற்பயிற்சிக்குப் பின்னர் மீட்சிக்கான விஷயங்களை செய்யத் தவறுவது. உடற்பயிற்சி செய்தபின் நம் தசைகள் நன்கு விரிந்தும், இறுகியும் இருக்கும் என்பதால், மீட்சி என்பது கட்டாயத்தேவை என்கின்றனர் நிபுணர்கள். ஒருவேளை உடற்பயிற்சிக்குப் பின்னர் தசைகள் இயல்பு நிலைக்கு வராவிட்டால், தசைப்பிடிப்பு, சோர்வு போன்றவை ஏற்படும். இது உடல்வலியையும் வேதனையையும் அதிகமாக்கும். எனவே மீட்பு என்பது அடிப்படை.

இதனால்தான் உடற்பயிற்சிக்கு முன்னர் வார்ம்-அப் செய்வது போலவே உடற்பயிற்சிக்கு பின்னர் கூல்-டவுன் பயிற்சிகளை நாம் கட்டாயம் செய்ய வேண்டி உள்ளது. அந்தப் பயிற்சிகளோடு சேர்த்து, கூடுதலாக உடலின் மீட்சிக்காக வேறு என்னவெல்லாம் எப்படியெல்லாம் செய்யலாம் / செய்ய வேண்டும் என்பது பற்றித்தான் இங்கே பார்க்கப்போகிறோம்.

உடற்பயிற்சியின்போதும், அதற்குப் பின்னரும் நீங்கள் என்னவெல்லாம் அணிகின்றீர்கள் என்பது மிக மிக முக்கியம். அது ஷூ, பேண்ட், மேலாடை என எதுவாக இருந்தாலும் சரி… அவை உங்களுக்கு அதிக இறுக்கமாக இருக்க வேண்டாம். எளிதில் உலர்ந்துவிடும்படியான துணியில், லேசாக இருக்க வேண்டும். இதன்மூலம் உடற்பயிற்சியின்போது வெளியேறும் வியர்வை அதிக நேரம் உடலோடு இல்லாமல் சிறிது நேரத்தில் காய்ந்துவிடும். உடலும் இறுக்கமாக உணராமல், எளிதில் இலகுவாகிவிடும்.

நீண்ட தலைமுடி உள்ளவர்கள் உடற்பயிற்சி செய்யும்போது முடிந்தவரை முடியை நன்கு தூக்கி கட்டிக்கொள்ளவும் (அ) கொண்டை போல போட்டுக் கொள்ளவும். இதன்மூலம் கழுத்துப்பகுதி, முதுகு, தலையின் முன் பகுதியில் நசநசவென இருப்பதை தவிர்க்கலாம். இவையாவும் உடற்பயிற்சிக்குப் பின்னர் அரிப்பு, வறட்சியிலிருந்து உடலை காக்கும்.

உடற்பயிற்சி செய்யும்போது கையில் உலர்ந்த சின்ன டவல் ஒன்றை எப்போதும் வைத்துக் கொள்ளுங்கள். அவ்வப்போது (வியர்வை அதிகமாக இருந்தால்) நன்கு துடைத்துக் கொள்ளுங்கள். உடற்பயிற்சிக்குப் பின்னர் இந்த டவலை துவைத்துவிடவும். உடற்பயிற்சியை மொத்தமாக முடித்தபின், துவைக்காமல் இந்த டவலை மறுபடி பயன்படுத்த வேண்டாம். மீறி பயன்படுத்துவது உடலில் ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும்.

உடற்பயிற்சிக்குப் பின் வியர்வை நன்கு உலர்ந்த பிறகு, கைகளையும் பின்முதுகையும் குளிர்ந்த நீரில் கழுவவும். இதன்மூலம் இப்பகுதிகளிலுள்ள நாடிப்பகுதி குளிர்ச்சியடைந்து, உடலின் வெப்பம் தணியத்தொடங்கும். உச்சந்தலையில் வியர்த்திருந்தால், ஷாம்பூ தேய்த்து முடியின் வேர்களை நன்கு சுத்தப்படுத்தவும்.

வியர்வையின்போதும் ஆக்டிவாக இருக்கும் டியோட்ரண்ட்ஸ் இப்போது சந்தையில் உள்ளன. உடற்பயிற்சி செய்யும் முன்பும், செய்த பின்னரும் அவற்றை பயன்படுத்துவது, துர்நாற்றத்தை தவிர்க்க உதவும். இதேபோல உடற்பயிற்சிக்கு முன்னும் பின்னும் முகத்தை க்ளென்ஸர் மூலம் சுத்தம் செய்வதும் நல்லது. உடற்பயிற்சி முடித்து சில நேரம் கழித்து குளித்துவிட்டு, உடலுக்கென விற்கப்படும் ஃப்ளேவர்டு எண்ணெய்கள் (Lavender, Rose ஃப்ளேவர்களில்) பயன்படுத்துவது துர்நாற்றத்தை குறைக்கும்.

இவை எல்லாவற்றையும்விட முக்கியம், ஆற்றல். உடல் முழுமையாக உழைத்திருப்பதால், ஆற்றலை இழந்திருக்கும். நீரையும் இழந்திருக்கும். இது இரண்டையும் அதற்கு நாம் தரவேண்டும். அந்தவகையில் உடற்பயிற்சிக்குப் பின் நன்கு தண்ணீர் குடியுங்கள். இவை உங்கள் புத்துணர்வோடு வைக்க உதவும். போலவே உடற்பயிற்சி முடிந்த 1 மணி நேரத்தில், ஏதாவது சத்தான உணவை சாப்பிட்டு விடுவதும் அவசியம். இது உடலை எளிதில் மீட்பதுடன், திசுக்களில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டிருந்தால் அதை சரிசெய்ய உதவியும் செய்யும். இந்த உணவும் அதிக புரதம் கொண்ட உணவாகவும், கார்போஹைட்ரேட்ஸ் நிறைந்த உணவாகவும் இருப்பது அவசியம். ஒரு கிளாஸ் பால் அருந்தி வருவது இதற்கு உதவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *