அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேச செயலகங்களில் நடைபெறும் அனர்த்தம் தொடர்பான கூட்டங்களுக்கு அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகளை கரையோர பிரதேச செயலாளர்கள் மேற்கொள்ள வேண்டும் என அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற போது மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை இது தொடர்பாக முன்மொழிவை முன்வைத்தார். ஜனாதிபதி தலைமையில் இயங்கும் தேசிய அனர்த்த சபையில் நானும், கிழக்கு மாகாண ஆளுநரும் கிழக்கு மாகாணம் சார்பில் அங்கத்துவம் பெற்றுள்ளோம்.

ஜனாதிபதி தேசிய அனர்த்த சபையிலும், பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மாவட்ட மட்ட அனர்த்தக் குழுக்களிலும், பிரதேச மட்ட அனர்த்தக் கூட்டங்களில் கலந்து கொண்டு அனர்த்தங்கள் தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு தெரிவித்துள்ளார்.

சென்ற 2024 ம் ஆண்டு அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தங்களின் போது அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து மாவட்ட, பிரதேச மட்ட அனர்த்த கூட்டங்களில் கலந்து நமது மாவட்ட மக்களுக்கு வெள்ள அனர்த்தத்தினால் ஏற்பட்ட நஷ்டங்கள் தொடர்பாகவும் எதிர்காலத்தில் அனர்த்தங்கள் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய விடயங்களையும் முன்வைத்தோம்.

2025ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பான பிரதேச செயலக மட்டத்தில் ஆதம்பாவா பாராளுமன்ற உறுப்பினர் மாத்திரம் கலந்து கொண்டதுடன் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களை அழைக்க வேண்டாம் என பிரதேச செயலாளர்களுக்கு பணிப்புரை வழங்கிவிட்டு நிந்தவூர் பிரதேசத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சகோதரர் அஸ்ரஃப் தாஹிர் இருக்கத்தக்கதாக பிரதேச அனர்த்தக் கூட்டத்தினையும் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் நான் பாராளுமன்ற உறுப்பினராகவும், தேசிய அனர்த்த சபையின் உறுப்பினராகவும் இருக்கத்தக்கதாக என்னை அழைக்க வேண்டாம் என பிரதேச செயலாளருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டு அட்டாளைச்சேனை பிரதேச அனர்த்த கூட்டத்தையும் நடாத்தியதுடன் பொத்துவில் பிரதேசத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சகோதரர் அப்துல் வாசித் இருக்கத்தக்கதாக அவரையும் அழைக்க வேண்டாம் என்று பிரதேச செயலாளருக்கு பணிப்புரை வழங்கி பொத்துவில் பிரதேச அனர்த்த கூட்டத்தினை நடத்துவதற்கு பிரதேச செயலக கூட்ட மண்டபத்திற்கு சென்ற போது பொத்துவில் பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம் செய்து கூட்டம் நடத்தப்படாமல் பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவாவை பிரதேச செயலகத்திலிருந்து வெளியேற்றியுள்ளனர்.

இச்செயற்பாடுகள் ஜனாதிபதியின் தலைமையில் இயங்கும் தேசிய அனர்த்த செயற்பாடுகளுக்கும் களங்கம் ஏற்படுத்தி உள்ளது. இது விடயமாக அம்பாறை மாவட்டத்தில் நிர்வாகத்திற்கு பொறுப்பாக உள்ள மாவட்ட அரசாங்க அதிபர் நடவடிக்கை எடுக்காவிட்டால் இது தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கு தான் கொண்டு வர உள்ளதாகவும் இது தொடர்பாக பாராளுமன்றத்திலும் பிரஸ்தாபிக்கவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை தெரிவித்தார்.

இது விடயமாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஸ்ரஃப் தாஹிர்,.அப்துல் வாசித், கோடீஸ்வரன் ஆகியோர் தங்களின் கண்டனத்தை தெரிவித்ததுடன் பாராளுமன்ற உறுப்பினர்களை மலினப்படுத்தும் செயற்பாடுகளை அதிகாரிகள் நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

பிரதி அமைச்சர் தவசந்த பியதிஸ்ஸ மக்கள் பிரதிநிதிகளான பாராளுமன்ற உறுப்பினர்களை அழைக்காமல் ஏன் பிரதேச செயலாளர்கள் அனைத்து கூட்டங்களையும் நடாத்தினீர்கள் என்று விபரங்களை தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார். இது தொடர்பாக பதிலளித்த அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் அஹமட் அப்கர் கூட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினருக்கு அழைப்பு கொடுக்க வேண்டாம் என பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா தனக்கு பணிப்புரை வழங்கியதால் பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை அவர்களுக்கு தான் அழைப்பு விடுக்கவில்லை என அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் தெரிவித்தார். இனிமேல் கரையோர பிரதேச செயலக பிரிவுகளில் நடைபெறும் கூட்டங்களுக்கு பிரதேச செயலாளர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்ப வேண்டுமென பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ பணிப்புரை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *