கிளிநொச்சி குளத்தில் இலட்சக் கணக்கான மீன்கள் உயிரிழப்பு

கிளிநொச்சி குளத்தின் வான்கதவு (துருசு கதவு) திருத்தப் பணிகளுக்காக நீர் வெளியேற்றப்பட்டதையடுத்து, குளத்திலிருந்த இலட்சக்கணக்கான மீன்கள் உயிரிழந்து கரை ஒதுங்கியுள்ளன. இதனால் அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன், குடிநீர் மாசடைந்திருக்கலாம் என்ற அச்சமும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கடந்த சனிக்கிழமை (21), கிளிநொச்சி குளத்தின் துருசு கதவில் ஏற்பட்டிருந்த சேதத்தினை சீர்செய்யும் நோக்கில் குளத்தின் நீர் முழுமையாகத் திறந்துவிடப்பட்டு திருத்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது குளத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழல் மற்றும் நீர்மட்டக் குறைவு காரணமாக, அங்கிருந்த இலட்சக்கணக்கான மீன்கள் உயிரிழந்து கரையொதுங்கத் தொடங்கின.

இறந்த மீன்கள் அழுகிய நிலையில் காணப்படுவதால், குளத்தை அண்டிய பிரதேசங்களில் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன், சூழல் மாசடைந்து சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் ஆகியன, இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் இறந்த மீன்களை அகற்றி குளத்தினைத் தூய்மைப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இதேவேளை, கிளிநொச்சி நகர மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கான குடிநீர் விநியோகம் குறித்த குளத்திலிருந்தே மேற்கொள்ளப்படுகின்றது. பெருமளவிலான மீன்கள் இறந்து நீரில் மிதந்துள்ள நிலையில், குடிநீரின் பாதுகாப்புத் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் பாரிய சந்தேகமும் அச்சமும் ஏற்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் பாவனைக்கு உகந்ததா என்பதை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை மற்றும் சுகாதாரத் திணைக்களம் ஆகியன உரிய பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தி, மக்களுக்குத் தெளிவான அறிவிப்பை வெளியிட வேண்டும் எனப் பிரதேச மக்கள் கோரிக்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *