திரைப்படம், இலக்கியம் மற்றும் சமூக உணர்வுகளைத் தனது படைப்புகளின் மூலம் வெளிப்படுத்தும் கலைஞர்
இலங்கையின் தமிழ் திரைப்படத்துறையில் இயக்குநர், எழுத்தாளர் மற்றும் நடிகையாகப் பல்வேறு தளங்களில் தனது திறமைகளை வெளிப்படுத்தி வருபவர் நவயுகா குகராஜா. யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், சமூகப் பிரச்சினைகள், பெண்களின் வாழ்வியல், போருக்குப் பின்னரான மக்களின் அனுபவங்கள் போன்றவற்றைத் தனது திரைப்படப் படைப்புகளின் ஊடாக வெளிப்படுத்தி வருகிறார்.
கல்வியும் ஆரம்பகால வாழ்க்கையும்
நவயுகா குகராஜா யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். வணிகவியல் துறையில் B.Com பட்டப்படிப்பையும் தகவல் தொழில்நுட்பத் துறையில் டிப்ளோமாவையும் நிறைவு செய்துள்ளார். மேலும், அமெரிக்காவின் New York University – Tisch School of the Arts நிறுவனத்தில் Film and TV Industry Essentials பயிற்சித் திட்டத்தையும் பூர்த்தி செய்துள்ளார்.
திரைப்படத்துறையில் முழுமையாக ஈடுபடுவதற்கு முன்னர் ஏழு ஆண்டுகள் அரச பாடசாலை ஆசிரியராகப் பணியாற்றியதுடன், போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பயிற்சி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளார்.
2018ஆம் ஆண்டு வெளியான Komaali Kings திரைப்படத்தின் ஊடாக நடிகையாகத் தனது திரைப்படப் பயணத்தை ஆரம்பித்தார். தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களிலும் நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய இவர், இயக்குநராகவும் தனது பயணத்தை விரிவுபடுத்தினார்.
2021ஆம் ஆண்டு வெளியான Pottu என்ற குறும்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். கணவனை இழந்த பெண் ஒருவர் சமூகத்தில் எதிர்கொள்ளும் கலாசாரக் கட்டுப்பாடுகள் மற்றும் பாகுபாடுகளை மையப்படுத்தி இக்குறும்படம் உருவாக்கப்பட்டது.

