காத்தான்குடி பொலிஸ் நிலையம், புதிய தங்குமிடம் திறப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் முக்கிய நகரமான காத்தான்குடியில் புனரமைக்கப்பட்ட பொலிஸ் நிலையக் கட்டிடம் மற்றும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கெனப் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தங்குமிடக் கட்டிடம் ஆகியன சனிக்கிழமை (2026 நவம்பர் 21) பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய அவர்களினால் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டன.

காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் (IP) நாலக்க அமரக்கோன் அவர்களின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வுக்கு வருகை தந்த பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய அவர்களுக்குப் பொலிஸ் மரியாதையுடன் கூடிய அணிவகுப்பு மற்றும் கலாச்சார முறைப்படியான வரவேற்பு வழங்கப்பட்டதுடன், சர்வமதத் தலைவர்களின் ஆசிகளும் வழங்கப்பட்டன. இவ்விழாவில் தமிழ் கலாச்சார நடன நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இதன்போது காத்தான்குடி வர்த்தக சமூகத்தினரால் பொலிஸ் மா அதிபருக்கு விசேட நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டதுடன், காத்தான்குடி பொலிஸ் ஆலோசனைக் குழுவினரால் பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்துக் கௌரவம் வழங்கப்பட்டது. அத்துடன், நிகழ்வில் கலந்துகொண்ட மாவட்ட உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கும் நினைவுச் சின்னங்கள் மற்றும் கௌரவங்கள் வழங்கி வைக்கப்பட்டன. மேலும், பிரதேச பாடசாலை மாணவர்களுக்குக் கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் உரையாற்றிய பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய அவர்கள், நாட்டிலிருந்து போதைப்பொருளை முற்றாக ஒழிப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அத்துடன், பொதுமக்களுக்குச் சிறந்ததும் பாதுகாப்பானதுமான சேவையை வழங்குவதற்கு ஒவ்வொரு பொலிஸ் நிலையங்களும் முழு அர்ப்பணிப்புடன் செயற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

கடந்த 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட காத்தான்குடி பொலிஸ் நிலையம், 1994ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி அதன் தற்போதைய அமைவிடத்திற்கு மாற்றப்பட்டது. நீண்டகாலத்திற்குப் பின்னர் நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் இப்பொலிஸ் நிலையம் புனரமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்விழாவில் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி சம்பத் குமார லியனகே, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல, மட்டக்களப்பு பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் லீலா ரத்ன, மட்டக்களப்பு மாநகர சபை மேயர், காத்தான்குடி நகர சபைத் தவிசாளர், ஆரையம்பதி பிரதேச சபைத் தவிசாளர், மாவட்ட மற்றும் பிராந்தியப் பொலிஸ் உயர் அதிகாரிகள், அரச நிறுவனங்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் உயர் அதிகாரிகள், மார்க்கப் பெரியோர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *