சமூக ஊடகங்களில் தற்போது பரவி வரும் புதிய பொலிஸ் சீருடை வடிவமைப்புகள் தொடர்பில் அரசாங்கம் இதுவரை எந்தவொரு கலந்துரையாடலையும் மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
அரலகங்வில பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய பொலிஸ் சீருடையில் மாற்றங்களை ஏற்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், சமூக ஊடகங்களில் தற்போது விவாதிக்கப்படும் சீருடை வடிவமைப்புகள் தொடர்பில் அரசாங்கம் எந்தவிதமான பரிசீலனைகளையும் மேற்கொள்ளவில்லை எனத் தெளிவுபடுத்தினார்.
பொலிஸ் சீருடையை மாற்றுவது மாத்திரம் அரசாங்கத்தின் நோக்கமல்ல எனத் தெரிவித்த அமைச்சர், பொலிஸ் சேவையில் அர்த்தமுள்ள சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்கே முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
ஒரு பொலிஸ் உத்தியோகத்தரின் சீருடையை மாற்றுவதன் மூலம் அவரது நடத்தை அல்லது பொலிஸ் சேவையை முன்னெடுக்கும் அணுகுமுறையில் மாற்றம் ஏற்படும் எனக் கருத முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
சமூகத்தில் அமைதியைப் பேணுவதுடன், பொதுமக்களுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்தக்கூடிய பொலிஸ் படையொன்றை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் வலியுறுத்தினார்.
குறிப்பாக, தேவையான கல்வித் தகைமைகள் மற்றும் திறன்களைக் கொண்ட, அறிவும் அனுபவமும் மிக்க பொலிஸ் உத்தியோகத்தர்களை உருவாக்க வேண்டும் எனவும், விசாரணைப் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகளின் தொழில்முறைத் திறன்களை மேம்படுத்துவது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
வெறுமனே புதிய சீருடையை அணிவிப்பதற்குப் பதிலாக, தற்போதைய கட்டமைப்பிலிருந்து மேம்படுத்தப்பட்ட புதிய பொலிஸ் சேவையொன்றை இலங்கை உருவாக்க வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அரலகங்வில பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சியை நிறைவு செய்த 295 பயிலுநர் பொலிஸ் உத்தியோகத்தர்களின் வெளியேற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் ஆனந்த விஜேபால மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

