ஹோர்முஸ் நீரிணைக்கு மேலாகப் பறந்த அமெரிக்க இராணுவத்துக்குச் சொந்தமான ஆளில்லா விமானம் (ட்ரோன்) ஒன்றைச் சுட்டு வீழ்த்தியுள்ளதாகவும், பஹ்ரைனில் அமைந்துள்ள அமெரிக்காவின் வான் பாதுகாப்பு ரேடார் கட்டமைப்புகள் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) தெரிவித்துள்ளது.
ஈரானின் அரச ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, ஹோர்முஸ் நீரிணைக்கு மேலாகச் செயற்பட்ட அமெரிக்காவின் MQ-1 மற்றும் MQ-9 ரக ஆளில்லா விமானங்களை இலக்குவைத்து ஈரானியப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன. இதில் சில ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் தரப்பு கூறியுள்ளது.
இதேவேளை, பஹ்ரைனில் அமெரிக்க இராணுவத்தினர் பயன்படுத்தும் அல்-ரிஃபா (Al-Rifaa) மற்றும் அவாலி (Awali) இராணுவத் தளங்களில் அமைந்துள்ள அமெரிக்காவின் பேட்ரியட் (Patriot) வான் பாதுகாப்பு ரேடார் கட்டமைப்புகளை இலக்குவைத்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும் ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது.
ஈரானின் வான்பரப்பிற்குள் அமெரிக்க ஆளில்லா விமானங்கள் தொடர்ச்சியாக அத்துமீறி நுழைவதாகக் குற்றஞ்சாட்டியுள்ள ஈரான், அதற்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
எனினும், ஈரானின் தாக்குதல் குறித்த கூற்றுகள் அனைத்தும் சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படவில்லை. அமெரிக்க மத்திய கட்டளைப் பீடம் (CENTCOM), முன்னதாக பஹ்ரைனை நோக்கி ஏவப்பட்ட ஈரானிய ட்ரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டதாகவும், அமெரிக்க இராணுவ உபகரணங்களுக்குச் சேதமோ, அமெரிக்கப் படையினருக்கு உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என்றும் தெரிவித்திருந்தது.
பஹ்ரைனில் அமெரிக்கக் கடற்படையின் ஐந்தாவது கடற்படைப் பிரிவின் தலைமையகம் அமைந்துள்ளது. இதனால், அந்த நாட்டிலுள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீதான தாக்குதல் முயற்சிகள் பிராந்தியப் பாதுகாப்பில் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணை வழியாக உலகின் கணிசமான அளவு எரிசக்தி ஏற்றுமதிகள் இடம்பெறுகின்றன. இந்த நீரிணையில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்படுவது சர்வதேச எரிபொருள் விலைகளிலும் உலகப் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகும்.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான இராணுவ மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணை மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் இடம்பெறும் இத்தகைய தாக்குதல்கள் மத்திய கிழக்கில் போர் மேலும் விரிவடையும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளன.

