மட்டக்களப்பில் பாலின வன்முறை தடுப்பு கூட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாலின அடிப்படையிலான வன்முறைகளைத் தடுப்பதற்கான நான்காம் காலாண்டுக்குரிய மாவட்ட வலையமைப்புக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் இன்று (13) பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ், உதவி மாவட்டச் செயலாளர் ஜி. பிரணவன் அவர்களின் மேற்பார்வையில், மாவட்ட மகளிர் அபிவிருத்தி இணைப்பாளர் எஸ். அருணாளினியின் ஏற்பாட்டில் இக்கூட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது குடும்ப வன்முறைகள், சிறுவர் துஷ்பிரயோகம், இளம்பருவக் கர்ப்பம், தற்கொலை முயற்சிகள் மற்றும் போதைப்பொருள் பாவனை உள்ளிட்ட சமூகப் பிரச்சினைகளின் தற்போதைய நிலைமை குறித்தும் அவற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

மேலும் பிரதேச செயலகப் பிரிவுகளில் அடையாளம் காணப்பட்ட பிரச்சினைகளுக்குத் துரித தீர்வுகளை வழங்குதல், சிறுவர் இல்லங்களின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு, பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான பாதுகாப்பு, ஆலோசனை மற்றும் பராமரிப்புச் சேவைகளை வலுப்படுத்துதல், பாடசாலை இடை விலகல்கள், நீண்டகாலப் பராமரிப்பை வழங்கக்கூடிய பெண்கள் பாதுகாப்பு இல்லமொன்றின் அவசியம் ஆகிய விடயங்களும் கவனத்தில் கொள்ளப்பட்டது.

பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்கும், பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள் ஒருங்கிணைந்து விரைந்து செயற்பட வேண்டியதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், வைத்தியர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், உயர்பொலிஸ் அதிகாரிகள், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள்,சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர், சமூக சீர்திருத்த மாவட்ட இணைப்பாளர், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதன் போது மாவட்டத்தில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது எதிர்நோக்கும் நடைமுறை பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தொடர்பாக இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன் இவற்றை கையாள்வதற்கான ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களை மாவட்ட அரசாங்க அதிபர் வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதன் போது பாலியல் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறையை தடுப்பதற்கான பல்துறை சார்ந்த தேசிய செயற்திட்டம் தொடர்பான தெளிவூட்டலை சமூக அபிவிருத்தி நிபுணர் ஏ.சுவர்ணலிங்கம் அவர்கள் மேற்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *