6 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் பனிச்சங்குளத்தின் புனரமைப்புப் பணிகள் நிறைவு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வடக்கு (வாகரை) பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள பனிச்சங்குளத்தின் புனரமைப்புப் பணிகள் 6 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நிறைவடைந்துள்ளன.

சுமார் 700 ஏக்கர் விவசாய நிலங்களை மையப்படுத்தி, 300 இற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்குப் பயனளிக்கும் முக்கிய நீர்ப்பாசனக் குளமாக பனிச்சங்குளம் விளங்குகின்றது.

நீண்டகாலமாக உரிய பராமரிப்பின்றிக் காணப்பட்ட இக்குளத்தின் குளக்கட்டினைப் புனரமைப்பதற்காக பிரஜாசக்தி வேலைத்திட்டத்தின் ஊடாக 6 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதனூடாக முன்னெடுக்கப்பட்ட பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.

புனரமைக்கப்பட்ட குளக்கட்டின் தற்போதைய நிலைமைகளை தேசிய மக்கள் சக்தியின் பிரதேச இணைப்பாளர் க. திலிப்குமார் நேரில் சென்று பார்வையிட்டு கள ஆய்வினை மேற்கொண்டார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த அவர், பனிச்சங்குளத்தை முழுமையாக அபிவிருத்தி செய்வதன் மூலம் தற்போது சிறுபோகத்தில் சுமார் 75 ஏக்கர் நிலப்பரப்பில் மாத்திரம் மேற்கொள்ளப்படும் விவசாயச் செய்கையை மேலும் விரிவுபடுத்த முடியும் எனக் குறிப்பிட்டார்.

இதன் மூலம் அதிகளவிலான விவசாயிகள் நன்மையடைவதுடன், பிரதேசத்தின் விவசாய உற்பத்தியையும் அதிகரிக்க முடியும் எனத் தெரிவித்த அவர், எதிர்காலத்தில் மேலதிக நிதி ஒதுக்கீடுகளைப் பெற்றுக்கொண்டு குளத்தை மேலும் புனரமைத்து முழுமையான அபிவிருத்திக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *