திருக்கோவில் ஆலய கந்தசஷ்டி விரதோற்சவம் 10ஆம் திகதி ஆரம்பம்!

அம்பாறை மாவட்டம் | ஜே.கே.யதுர்ஷன் | செய்தியாளர் | தம்பிலுவில்

தட்சண கைலாசம் எனப் போற்றப்படும் அம்பாறை மாவட்டம், திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் 2026ஆம் ஆண்டுக்கான வருடாந்த கந்தசஷ்டி விரதோற்சவம் எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

இதனை முன்னிட்டு ஆலயத்தில் தொடர்ச்சியாக விசேட பூஜை வழிபாடுகளும் திருவிழாக்களும் நடைபெறவுள்ளதுடன், நவம்பர் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சூரசம்ஹாரத் திருவிழாவும், நவம்பர் 16ஆம் திகதி திங்கட்கிழமை தெய்வானை திருக்கல்யாண வைபவமும் சிறப்பாக இடம்பெறவுள்ளன.

திருவிழா உபயதாரர்கள் விபரம்

நவம்பர் 10ஆம் திகதி முதலாம் திருவிழாவை திருக்கோவிலைச் சேர்ந்த திரு. து. நித்தியானந்தன் குடும்பத்தினரும், நவம்பர் 11ஆம் திகதி இரண்டாம் திருவிழாவை திருக்கோவிலைச் சேர்ந்த திரு. அ. செல்வராசா குடும்பத்தினரும் பொறுப்பேற்று நடத்தவுள்ளனர்.

அதேபோன்று, நவம்பர் 12ஆம் திகதி மூன்றாம் திருவிழாவை கனடாவைச் சேர்ந்த திரு. எஸ்.பீ. கனகசபாபதி குடும்பத்தினரும், நவம்பர் 13ஆம் திகதி நான்காம் திருவிழாவை திருக்கோவிலைச் சேர்ந்த திரு. க. கோபாலபிள்ளை குடும்பத்தினரும், நவம்பர் 14ஆம் திகதி ஐந்தாம் திருவிழாவை கந்தசஷ்டி விரதகாரர்களும் நடத்தவுள்ளனர்.

நவம்பர் 15ஆம் திகதி நடைபெறவுள்ள சூரசம்ஹாரத் திருவிழாவை திருக்கோவில் பொதுமக்களும், நவம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ள தெய்வானை திருக்கல்யாண வைபவத்தை தம்பிலுவிலைச் சேர்ந்த திருமதி ப. விநாயகமூர்த்தி குடும்பத்தினரும், திருமதி தி. கணேசமூர்த்தி குடும்பத்தினரும் இணைந்து நடத்தவுள்ளனர்.

பிரதம குருக்கள் தலைமையில் பூஜை வழிபாடுகள்

ஆலய பிரதம குருவான வேதாகம, கிரியா தத்துவ வித்தகர், பிரதிஷ்டா சிரோன்மணி, சிவாமாக வித்தீயா பூசனம், சிவாச்சாரிய திலகம், விபுலமணி சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள் மற்றும் ஆலய குரு சிவஸ்ரீ நீ. அங்குசநாதக் குருக்கள் ஆகியோரின் தலைமையில் பூஜை வழிபாடுகளும் திருவிழாக்களும் நடைபெறவுள்ளன.

விரதகாரர்களுக்கான அறிவிப்பு

நவம்பர் 14ஆம் திகதி சனிக்கிழமை இரவு 9.14 மணிக்கு ஷஷ்டி திதி ஆரம்பமாகி, நவம்பர் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு 9.35 மணிக்கு நிறைவடைகின்றது.

இதற்கமைய, விரதம் அனுஷ்டிக்கும் அடியார்கள் நவம்பர் 16ஆம் திகதி திங்கட்கிழமை விரதத்தை நிறைவு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவிழாக்களுக்கான மேள வாத்திய நிகழ்வுகளை திருக்கோவில் – 04 பகுதியைச் சேர்ந்த கே. கண்ணன் குழுவினர் வழங்கவுள்ளனர்.

ஆலய பரிபாலன சபை நிர்வாகம்

ஆலய பரிபாலன சபையின் தலைவராக நற்பட்டிமுனையைச் சேர்ந்த திரு. சு. சுரேஸ், உப தலைவராக அக்கரைப்பற்றைச் சேர்ந்த திரு. க. சபாரெத்தினம், செயலாளராக திருக்கோவிலைச் சேர்ந்த திரு. அ. செல்வராசா, வண்ணக்கராக தம்பிலுவிலைச் சேர்ந்த திரு. வ. ஜயந்தன், பொருளாளராக தம்பிலுவிலைச் சேர்ந்த திரு. கோ. கிருஷ்ணமூர்த்தி மற்றும் கணக்குப்பிள்ளையாக அக்கரைப்பற்றைச் சேர்ந்த திரு. கி. லோகேந்திரராஜா ஆகியோர் செயற்பட்டு வருகின்றனர்.

இவ்வருடாந்த கந்தசஷ்டி விரதோற்சவத்தில் அடியார்கள் அனைவரும் விரதம் அனுஷ்டித்து, ஆலயத்திற்கு வருகைதந்து இறையருள் பெற்றுச் செல்லுமாறு ஆலய பரிபாலன சபையினர் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *