மக்களின் விருப்பம் அல்லது வெறுப்பைப் பொருட்படுத்தாமல், நாட்டிற்குத் தேவையான நிதிக் கொள்கைகள் கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
களனிய பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதாரத்தைப் பாதுகாப்பதற்காக மத்திய வங்கி ஏற்கனவே கடினமான தீர்மானங்களையும் கொள்கைகளையும் நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும், நாட்டின் தேவைக்கேற்ப இத்தகைய கொள்கைகளை எதிர்காலத்திலும் நடைமுறைப்படுத்த பின்வாங்கப்போவதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மக்களின் விருப்பத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இவ்வாறான தீர்மானங்களை நடைமுறைப்படுத்தத் தவறினால், இறுதியில் முழு நாட்டிற்கும் கடுமையான பாதிப்பே ஏற்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

