வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (01) காலை 5.30 மணிக்கு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வட அட்சரேகை 11.5° மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 86.4° ஆகிய ஆயத்தொலைவுகளுக்கு அருகில் நிலை கொண்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை 11.30 மணியளவில் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மேற்கு-மத்திய வங்காள விரிகுடாவில் சூறாவளியாக (Cyclone) வலுவடையக்கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் இது, மேலும் வலுவடைந்து தீவிர சூறாவளியாக (Severe Cyclonic Storm) மாறி, நவம்பர் 3, 2026 அன்று காலை 5.30 மணியளவில் ஆந்திரப் பிரதேச கடற்கரையை கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

“எச்சரிக்கை” (Warning) பிரிவின் கீழ் சில கடல் பகுதிகளில், காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 70 முதல் 80 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும். பலத்த இடியுடன் கூடிய மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், இக்கடல் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.

எனவே, வட அட்சரேகை 10° – 15° மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 80° – 90° ஆகிய ஆயத்தொலைவுகளுக்கு இடைப்பட்ட ஆழ்கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று கடற்படையினருக்கும் மீனவர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், தற்போது அந்த கடல் பகுதிகளில் ஈடுபட்டுள்ள கடற்படையினர் மற்றும் மீனவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த கடல் பகுதியில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள கடற்படையினர் மற்றும் மீனவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், வானிலை ஆய்வு மையம் இது தொடர்பாக வெளியிடும் அடுத்தடுத்த முன்னறிவிப்புகள் மற்றும் அறிக்கைகளைக் கவனிக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *